- வெங்கச்சேரி சரமாரி
- காஞ்சிபுரம்
- காஞ்சிபுரம் மாவட்டம்
- வெங்கச்சேரி
- காஞ்சிபுரம்-உத்தரமேரூர் சாலை
- மகரல் நதி
- வெங்கச்சேரி சரமாரி
காஞ்சிபுரம்: கோடைகால கடும் வெப்பத்தால், வெங்கச்சேரி தடுப்பணையில் நீரின்றி வறண்ட பூமியாக காணப்படுகிறது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் – உத்திரமேரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள வெங்கச்சேரி – மாகரல் செய்யாற்றின் குறுக்கே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ரூ.8 கோடி மதிப்பீட்டில் 1.7 மீட்டர் உயரமும், 282 மீட்டர் நீளத்திலும் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று, இப்பணிகள் அனைத்து முடிவுற்று, கடந்த 2019ம் ஆண்டு இந்த தடுப்பணையானது திறந்து வைக்கப்பட்டது.
இந்திய நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன் அனுமந்தண்டலம் செய்யாற்றில் ஒரு தடுப்பணை கட்டப்பட்ட பின்பு, நாடு சுதந்திரம் பெற்றபின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தரைக்குமேல் கட்டப்படும் முதல் தடுப்பணை தான் இந்த வெங்கச்சேரி தடுப்பணை. மேலும், செய்யாற்றில் தண்ணீர் வந்தால், இந்த தடுப்பணையில் தேக்கி வைக்கப்படும் நீரினால் ஆற்றுப்பாசனம் மட்டும் இல்லாமல் கிணற்றிலும் நீர்மட்டம் உயரும்.
குறிப்பாக இந்த தடுப்பணையில் தேக்கி வைக்கப்படும் நீரால் அப்பகுதியில் உள்ள ஆற்றங்கரையோர விவசாயிகள், பாசனம் வசதி பெற்று பயன் அடைவார்கள். இந்நிலையில், பல மாதங்களுக்கு முன்னர் வரை வெங்கச்சேரி தடுப்பணையில் சற்று நீர் இருப்பு இருந்தது. தற்போது, கோடை காலத்தில் நிலவும் கடும் வெப்ப நிலை காரணமாக, தடுப்பணையில் ஒரு சொட்டு கூட நீர் இல்லாமல் வறண்ட நிலையில், தடுப்பணை முழுவதும் வறண்ட பூமியாக காட்சியளிக்கின்றது.
இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யாறும், பாலாறும் நீரின்றி வறண்டு தான் கிடக்கிறது. பருவமழை உள்ளிட்ட மழை காலங்களில் செய்யாற்றில் நீர் செல்லும் போதெல்லாம், இந்த தடுப்பணை முழுவதும் நீர் நிரம்பி கடல்போல் காட்சியளித்தும், தடுப்பணையில் நீர் வழிந்தோடியும் காணப்படும். தற்போது, கோடைகாலத்தில் வெங்கச்சேரி தடுப்பணை முற்றிலுமாக வறண்டு காணப்படுவது விவசாயிகளை வேதனை அடைய செய்துள்ளது.
The post கோடையின் கடும் வெப்பத்தால் நீரின்றி வறண்ட பூமியான வெங்கச்சேரி தடுப்பணை: விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.