×

கன்னியா ராசி முதலாளி மற்றும் தொழிலாளி

கன்னியா ராசிக்காரர்கள், யதார்த்தவாதிகள். நடைமுறைக்கு ஒத்துவரும் தொழிலைத் தான் லாபகரமாக செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் மாதச் சம்பளத்திற்கு வேலைக்குச் சேர்வதாக இருந்தாலும், தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையூறு இல்லாத வகையில் குடும்பத்துக்கும் அதிக நேரம் கிடைக்கின்ற வேலையில்தான் சேர்வார்கள். கணக்கு வழக்கில் கெட்டிக் காரர்கள் என்பதால், அலுவலகத்தில் இவர்களுக்குத் தனி மரியாதை இருக்கும். எல்லாப் புள்ளி விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார்கள். நினைவாற்றல் மிக்கவர்கள். எனவே, ஒரு விவரம் கேட்டவுடன் எதையும் பார்த்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தன் நினைவில் இருந்தே எல்லாவற்றையும் எடுத்து டக்.. டக்.. என்று வரிசையாக சொல்லிக் கொண்டே வருவார்கள்.

முதலாளி

முதலாளிகளாக இருந்தாலும், நிர்வாகியாக இருந்தாலும் பணியாளர்களின் இன்ப துன்பங்களைக் கூர்ந்து கவனித்து அவற்றில் பங்கு கொள்ள சகோதர மனோபாவத்துடன் பழகுவார்கள். அதே வேளையில், அவர்கள் அக்கறையில்லாமல் செய்யும் சிறுதவறைக் கூட மன்னிக்க மாட்டார்கள்.

பொதுநல ஆர்வலர்

பெரும்பாலும் இவர்கள், யாருக்காவது பணம் தேவைப்பட்டால், பணத்தைக் கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்வார்கள். வேறு யாராவது ஒருவர்தான் இவர்கள் கொடுத்த பணத்தைக் கொண்டு அடித்தள மக்களிடம் வந்து நின்று அவர்களுக்குரிய தேவைகளை நிறைவேற்றித் தருவார்கள். கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைக்கின்ற இவர்கள், நேரடியாக அவர்களை சந்தித்து சேவை செய்வது கிடையாது. மக்கள் மீது மிகுந்த அன்பும் பரிவும் கொண்ட இவர் அதை வெளிப்படையாக பகட்டுத்தனமாகக் காட்ட மாட்டார். பண்போடு வெளிப்படுத்துவார்.

இவரை ஏமாற்ற முடியாது

கன்னியா ராசியில் தொழில் அதிபர்களாக இருப்பவர்கள், எதையும் ஆராய்ந்து முடிவுக்கு வருவதில் வரும் நுண்ணறிவு படைத்தவர்கள் ஆவர். இவர்களை எந்த விதத்திலும் ஏமாற்ற முடியாது. திறமையான பொய் சொல்லியைக் கூட இவர் ஒரு நொடியில் கண்டுபிடித்து விடுவர். சிறு சிறு விஷயங்களில்கூட மிகுந்த கவனம் செலுத்துவர். கண்ணசைவு விரல் அசைவுகூட இவருடைய மனதில் ஆழமாக பதிந்து விடும். இவர் வெறும் சொற்களை வைத்து ஒருவரை எடை போடுவது கிடையாது. அவருடைய நடை உடை பாவனையையும் அவருடைய ஒவ்வொரு அசைவையும் மனதில் கொண்டு அவரைப் பற்றிய ஒரு முடிவுக்கு வருவார்.

நேர்மையும் துரோகமும்

கன்னியா ராசி முதலாளியும், நிர்வாகியும் எந்தப் பிரச்னையையும் சண்டை போராட்டம் என்று கொண்டு செல்ல விரும்ப மாட்டார்கள். உட்கார்ந்து பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்பார். போராட்டங்கள் வராமல், போலீஸ் கோர்ட் என்று போகாமல் பேச்சு வார்த்தையின் மூலம் சாதித்துக்காட்டுவார். அதே வேளையில், யாரேனும் இவருக்கு எதிராக செயல்பட்டால் உடனே அவரை வெளியேற்றி விட்டாலும்கூட அவர் குறித்த வன்மம் இவர் மனதின் ஆழத்தில் இருந்து கொண்டே இருக்கும். ஒரு போதும் மன்னிக்கவோ மறக்கவோ மாட்டார். ஒதுக்கி விடுவார். தனக்கு எதிராக செயல்பட்டவரை அடித்து உதைத்து தண்டனை வாங்கித்தருவதில் இவருக்கு ஈடுபாடு கிடையாது. காரணம் சற்று பயந்த சுபாவம் உடையவர். ஆனாலும், உள் மனதில் இவருக்கு மிகுந்த ஆங்காரம் இருக்கும். எனவே ஒரு முறை இவருக்கு துரோகம் செய்தவர்களை இவர் மறுமுறை சந்திப்பதோ, பேசுவதோ அவர்களோடு பழக்கம் வைத்துக் கொள்வதோ கிடையாது.

கன்னியாராசிப் பணியாட்கள்

கன்னியா ராசி பணியாளர்கள், நேர்மையான, ஒழுக்கமான உழைப்பாளிகளாக இருப்பர். எடுத்த செயலை முடிக்காமல் அரைகுறையாக விட்டுச் செல்வதில்லை. அது இவர்களுக்குப் பிடிக்காது. முழு மனதுடன் இறங்கிச் செய்வர். மிகுந்த ஒப்படைப்புடன் ஒரு வேலையை செய்து முடிப்பார்கள். வேலையை நேசித்துப் பிரியமுடன் செய்வர். அறத்துக்கு புறம்பான வேலைகளை இவர்கள் செய்ய விரும்புவதில்லை. தொழிலில் தர்மம் இருக்க வேண்டும், நியாயம் இருக்க வேண்டும் என்று விரும்புவர். ஆனால் அதே சமயம் சம்பளம் இன்றி வேலை பார்ப்பதோ அல்லது தர்மத்துக்கு வேலை பார்ப்பதோ இவர்களிடம் கிடையாது. பேசிய சம்பளம், பேசிய வேலை, பேசிய நேரம், என்று கறாராக தங்கள்

பணியில் இருப்பார்கள்.

கன்னியா ராசி பணியாட்கள் முதலாளிகளுடன் இணைந்து சிந்தித்து செயல் படுவார்கள். தங்கள் மேலதிகாரிகள் சொல்வதில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டு அதன்படி நடப்பார்கள். மேலதிகாரிகளை கொடுமைக்காரராகவும் பகைவராகவும் கருதி அவர்களைப் பற்றி புறம் பேசுவதும் பொய் பேசுவதும் கன்னியா ராசிப் பணியாளர்களிடம் இருக்காது.

ஒரே வேலையில் ஓய்வுக் காலம் வரை

கன்னியாராசிக்கரகள் நல்ல மேஸ்திரிகள், கண்காணிப்பாளர், மேற்பார்வையாளர், நிர்வாகி, தலைமை எழுத்தாளர், மேலாளர் போன்ற பதவிகளில் இருந்து, ஒரே வேலையை ஆயுள் காலம் முழுக்க செய்து அமைதியாக ஓய்வு பெற விரும்புவர். இவர்கள் பெரும்பாலும் ஒரே வேலையில் இருந்து ஓய்வு பெறுவார்கள். அடிக்கடி வேலை மாற்றுவது இவர்களிடம் கிடையாது. பலர் அரசுப் பணிகளில் வங்கிப் பணிகளில் இருப்பார்கள். செய்யும் வேலையை திருப்தியாகச் செய்து முடிப்பதால், அந்த அலுவலகத்தின் அச்சாணியாகத் திகழ்வார்கள்.

சிறப்புப் பண்புகள்

கடின உழைப்பு, நுண்ணறிவு, திட்டமிடுதல், சுத்தமான பழக்க வழக்கங்கள், தூய்மையான சிந்தனை, நேர்மையான செயல்பாடு, பொறுமையான அணுகுமுறை ஆகியவை கன்னியா ராசி முதலாளி மற்றும் தொழிலாளியிடம் காணப்படும், சிறப்புப்பண்புகளாகும். அதுவே, இவர்களின் தனிப் பண்புகள் ஆகும்.

 

The post கன்னியா ராசி முதலாளி மற்றும் தொழிலாளி appeared first on Dinakaran.

Tags : Virgo ,Virgos ,Dinakaran ,
× RELATED கன்னியா ராசி குழந்தையை வளர்ப்பது எப்படி?