×

பூமியைத் தாங்கும் கூர்ம பாதங்கள்

கூர்ம ப்ருஷ்ட ஜயிஷ்னு ப்ரபதாந்விதா

அம்பிகையின் பாதாதி கேசம் வர்ணனையில் கணுக்கால்களுக்கு அடுத்ததாக வர்ணிக்கக் கூடியது அம்பிகையினுடைய பாதத்தையே ஆகும். இங்கு பாதம் என்றால் எப்படியெனில், இந்தப் பாதத்தின் மேற்பகுதி இருக்கிறதல்லவாமும் விரல்களுக்கு மேலேயுள்ள பகுதியை வசின்யாதி வாக் தேவதைகள் வர்ணிக்கிறார்கள். எப்படி வர்ணிக்கிறார்களெனில், கூர்ம ப்ருஷ்ட ஜயிஷ்னு ப்ரபதாந்விதா… என்று வர்ணிக்கிறார்கள். கூட குல்பா என்று கணுக்காலை வர்ணித்துவிட்டு, பாதத்தின் மேற்பகுதியை வர்ணிக்கும்போது கூர்ம ப்ருஷ்டம் – ஆமையினுடைய மேல் ஓடு என்று பொருள். அந்த ஆமையினுடைய மேல் ஓடு எப்படியிருக்கிறதோ அதுபோன்று தன்னுடைய பாதத்தினுடைய மேல் பகுதியை உடையவள். இந்த நாமத்தினுடைய பொருள் என்னவெனில், ஆமையினுடைய மேற்பகுதியைவிட சிறந்த பாதங்களின் பாதத்தின் மேற்பகுதியை உடையவள் என்று பொருள். அதுதான் கூர்ம ப்ருஷ்ட ஜயிஷ்னு ப்ரபதாந்விதா… என்று வருகின்றது. இந்த இடத்தில் நமக்கொரு சந்தேகம் வரலாம். வசின்யாதி வாக்தேவதைகள் ஒவ்வொரு அங்கத்திற்கும் வெவ்வேறு விதமான உவமைகள் சொல்லி விளக்கினார்கள். இப்போது அம்பிகையின் திருப்பாதங்கள் என்பது இருப்பதிலேயே முக்கியமான அங்கமாகும். நமஸ்கரிப்பதே பாதத்திற்குத்தான். பாதத்தில்தான் சரணாகதி அடைகின்றோம். பாதம் என்கிற முக்கியமான அங்கத்தை வர்ணிக்கும்போது உயர்ந்த ஒரு உவமையைச் சொல்லாமல் மிகவும் சாதாரணமான, இன்னும் சொல்லப்போனால் கீழான ஒரு உவமையைச் சொல்கிறார்கள்.

ஆமையினுடைய ஓடு என்பது கொஞ்சம் கீழான உவமை. அம்பிகையினுடைய மென்மையான பாதம், ஆமையினுடைய ஓடு என்பது கடினமானது. ஆமையை நாம் கொஞ்சம் ஒதுக்கித்தானே வைத்திருக்கிறோம். அப்படிப்பட்ட ஆமையினுடைய ஓட்டைப்போய் ஏன் பாதத்திற்கு உவமையாக காண்பிக்க வேண்டும். ஏன், எத்தனையோ உயர்ந்த உவமைகள் சொன்னவர்கள் கடைசியில் இந்த ஆமையினுடைய ஓட்டைக்கொண்டுபோய் பாதத்திற்கு ஏன் சொல்கிறார்கள் என்பதை கொஞ்சம் ஆழமாகப் பார்க்க வேண்டும். இதற்கு முந்தைய நாமாவில் என்ன சொல்லப்பட்டிருக்கின்றது என்று பார்க்க வேண்டும். இதற்கு முந்தைய நாமத்திற்கான தத்துவார்த்தத்தின் ஒரு கோணமாக, எதெல்லாம் நாம் கீழானது என்று நினைக்கிறோமே…. அதை அனைத்தையும் அவன் கடந்துவிடுகின்றான். அதை கடந்ததற்குப்பிறகு அவன் பார்ப்பது முழுவதும் மேலானதுதான். அவன் அந்த ரகசிய நிலையை கடந்ததற்குப் பிறகு, அவனுடைய பார்வையில் கீழானது என்பதே இருக்காது. ஆமையினுடைய ஓடு எப்படி கீழானது ஆகும்.

ஆமையினுடைய ஓட்டை கீழானது என்று சாதாரண நிலையிலிருந்து சொல்லலாம். இதற்கு முன்னால் உள்ள நாமத்தில் ஒரு ஆன்மிக சாதனகனுக்குள் ஒரு transformation நடக்கிறது என்று பார்த்தோம். அந்த சாதகனுக்குள் அந்த transformation நடக்கும்போது, அவன் கீழானவற்றையெல்லாம் கடந்துபோய்விட்டான். அவன் மேலான நிலையை அடைந்துவிட்டான். அவன் ஆத்ம சொரூபத்தை அடைந்துவிட்டான். இனி அவன் பார்ப்பது முழுவதுமே ஆத்ம சொரூபம்தான். அவனுக்கு ஒரு ஆமையினுடைய ஓட்டைப் பார்த்தாலும் கூட, அதாவது அந்த நிலையை எய்திய சாதகன் என்ன செய்வான் எனில், இன்னும் சொல்லப்போனால் ஆமையினுடைய ஓடுகூட அம்பாளுடைய பாதங்களாக தெரிகின்றது. இன்னும் கொஞ்சம் சூச்சுமமாகப் பார்த்தால், ஆமையினுடைய ஓடு போதும் இந்த பிரபஞ்சத்தை தாங்குவதற்கு என்று அவன் அறிந்து கொள்கிறான். அதனால்தான், மகாவிஷ்ணு கூர்மாவதாரத்தை எடுத்து பிரபஞ்சத்தை தாங்குகிறார்.

இப்போது அம்பிகையினுடைய பாதத்தை ஏன் ஆமையினுடைய பாதத்தோடு ஒப்பிடுகிறார்கள். இந்த மொத்த சிருஷ்டியும் அவளுடைய பாதத்தினுடைய தூசிக்குச் சமம். இந்த மொத்த சிருஷ்டியும் பாதத்தினுடைய தூசிக்குச் சமம் என்பதனால், இந்த பிரபஞ்சத்தையே தாங்கக்கூடிய ஓட்டைக் கொண்டுபோய் அம்பிகையினுடைய பாதத்திற்கு ஒப்பிடுகிறார்கள். நாம் சாதாரணமாகச் சொன்னால் ஆமையினுடைய ஓடு என்பது கீழான விஷயம். ஆனால், அத்யாத்மமான ஒரு சாதகனுக்கு ஆமையினுடைய ஓட்டைப் பார்த்தால்கூட அவனுக்கு அம்பிகையினுடைய பாதம்தான் நினைவிற்கு வரும். ‘‘ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்’’ என்று பெரிய புராணத்தில் வருகின்றது. ஞானிகள் ஒரு ஓட்டையும் தங்கக் கட்டியையும் அருகருகே வைத்தால், இரண்டையும் அவர்கள் ஒன்றாகத்தான் பார்ப்பார்கள். அப்படியே, பிக்ஷுகோ உபநிஷதத்தில் கூட, ‘‘சம லோஷ்டாஸ்ம காஞ்சனாஹா…’’ என்றொரு வாக்கியம் உண்டு. ஞானிகளின் நிலை எப்படியெனில், ஒரு கல்லையும் ஒரு தங்கக் கட்டியையும் ஞானிகளிடம் அளித்தால், அவர்களுக்கு இரண்டும் ஒன்றுதான். இந்த தங்கக் கட்டிக்குள்ளும் ஆத்ம சொரூபம்தான் இருக்கிறது. அந்த கல்லுக்குள்ளேயும் ஆத்ம சொரூபம்தான் இருக்கிறது.

எப்படியெனில், ஆமையினுடைய ஓடும் ஆத்ம சொரூபமே. அந்த ஆமையினுடைய ஓடு எதை ஞாபகப்படுத்துகிறதெனில் அம்பிகையினுடைய் பாதத்தின் மேற்பகுதியையே அந்த ஞானிக்கு ஞாபகப்படுத்தும். ஆத்ம சொரூபமாக இருக்கும் பாதம் அந்த சாதகனுக்கு ஞாபகம் வரும். எப்பொழுது எனில் ஆமையினுடைய ஓட்டைப் பார்த்தால்கூட. மேலான விஷயத்தைப் பார்த்து ஞாபகம் வருவது என்பது வெகு சுலபம். உதாரணமாக ஒரு தாமரைப்பூவைப் பார்த்தால் அம்பிகையின் திருமுகமோ அல்லது அம்பிகை நினைவிற்கு வந்தால் அது இயற்கை. ஒரு சக்ரமோ அல்லது கோயில் நினைவிற்கு வந்தால், அதெல்லாம் இயற்கையான நடக்கக்கூடியது. ஆமையினுடைய ஓட்டைப் பார்த்தாலும் அவனுக்கு அம்பிகையினுடைய ஞாபகம் வரவேண்டும். அதுதான் பெரிய விஷயம். இன்றைக்கும் மகாமேருவை பிரதிஷ்டை செய்யும்போது, அந்த மகாமேருக்கு கீழே கூர்மபீடம் இருக்கும். கூர்ம பீடத்திற்கு மேலேதான் மகாமேரு பிரதிஷ்டை ஆகியிருக்கும். சில இடங்களில் அல்லது கோயில்களில் வெளிப்படையாக தெரியும். சில கோயில்களில் சூட்சுமமாக இருக்கும். நம் கண்களுக்கு தெரியாது. அதேபோன்று சிவலிங்கத்தைப் பார்த்தாலும், கூர்ம பீடத்தின்மீதுதான் சிவலிங்கம் இருக்கும். ஆனால், கூர்ம பீடத்தை சூட்சுமமாக ஆவாஹானம் செய்து விடுவார்கள். சில இடங்களில் வெளிப்படையாக காட்டியிருப்பார்கள்.நாம் உட்கார்ந்து பூஜை செய்யும் ஆசனமானது கூர்ம சொரூபம்தான். உண்மையில் கூர்மாசனத்தில் அமர்ந்துதான் பூஜையே செய்ய வேண்டும். கூர்மம் என்பது இங்கு பூமி தத்துவம்.

பூமியை தாங்கக்கூடியது. எதன் மேல் அனைத்தும் நிற்கின்றதோ அந்த தொடக்கமே கூர்மம். எங்கு இந்த சிருஷ்டி தொடங்குகிறதோ அது கூர்மம். இந்த பிரபஞ்சத்தின் தொடக்க இடம் எதுவோ அதுவே கூர்மம்.
அம்பிகையினுடைய பாதத்தின் மேல் பகுதி ஏன் கூர்ம ஓடு என்றால் அவளுடைய பாதத்திலிருந்துதானே சிருஷ்டியே தொடங்குகின்றது. அவளுடைய பாதம்தானே இந்த சிருஷ்டிக்கு ஆதாரமாக இருக்கின்றது. அதனால் எது ஆதாரமோ அந்த பாதத்தை நாம் பற்றிவிட்டால் போதும். எது முதல் அடியோ அதைத்தான் நாம் திருவடி என்கிறோம். இப்படி எல்லாமே அவளுடைய பாதத்தில்தானே ஒடுங்குகிறது. அப்போது படைத்தல், காத்தல், ஒடுங்குதல் என்று எல்லாமே அவளுடைய பாதத்தில் நடப்பதினால் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஆதாரமான கூர்மத்தை அம்பிகையோடு பாதத்தோடு ஒப்பிடுகின்றோம்.

இந்தப் பார்வையில் பார்த்தால் இது கீழான உவமை கிடையாது, இதுவொரு அத்யாத்மமான ஒரு உவமை. நிறைய வைஷ்ணவ கோயில்களில் கூர்ம பீடத்தின்மேல்தான் சுவாமியை எழுந்தருளச் செய்வார்கள். அதேபோல மத்வ சம்பிரதாயத்தில் ஸ்ரீராகவேந்திரருடைய பிருந்தாவனத்தை எடுத்துக்கொண்டால் அதற்குக் கீழ் கூர்மபீடம் இருக்கும். அதனால் கூர்ம பீடம் என்பது மிகவும் முக்கியமானது. இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. ஆமையினுடைய ஓடு முதற்கொண்டு, ஒரு சாதாரண அல்லது கீழான விஷயத்தைப் பார்த்தால் கூட ஆமையினுடைய ஓட்டை பார்க்கும்போது யாருக்கு அம்பிகையினுடைய பாதம் நினைவிற்கு வருகின்றதோ, அதேபோன்று இந்த உலகத்தில் இருக்கின்ற சாதாரண கீழான விஷயத்தைப் பார்த்தால்கூட யாருக்கு அம்பிகையினுடைய நினைவு வருகின்றதோ அவனுக்குள் அந்த transformation நடந்திருக்கிறது அல்லது நடந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அதுதான் இந்த நாமத்தினுடைய திரண்ட அர்த்தம். சம தரிசனம். அவ்வளவே. இந்த நாமத்திற்கான கோயிலாக காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலைச் சொல்லலாம். காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் கச்சபேசம் என்றும் அறியப்படுகிறது. திருமால், கச்சபம் (ஆமை) வடிவில் வழிபட்டதால் இது கச்சபேசம் எனப்பட்டது. சுவாமியும் கச்சபேஸ்வரர் (கச்சபேசர்) என விளங்குகிறார். அம்பாளின் திருப்பெயர் சுந்தராம்பாள் அம்மையார்.

The post பூமியைத் தாங்கும் கூர்ம பாதங்கள் appeared first on Dinakaran.

Tags : earth ,Jaishnu Prabhadanvita Ambigai ,Badati Kesam ,Ambigai ,Vasinyati Vak ,
× RELATED மிகப் பெரிய காரியங்களுக்கு மிகச் சிறிய காரணங்கள் போதும்!