×
Saravana Stores

உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டதால் புட்லூர் ரயில் நிலைய கேட் நிரந்தரமாக மூடல்: மாற்றுத்திறனாளிகள் முதியோர் அவதி

 

திருவள்ளூர், மே 6: திருவள்ளூர் அடுத்த புட்லூர் ரயில் நிலையத்தில் இறங்கி அங்காளபரமேஸ்வரி ஆலயம் மற்றும் காக்களூர் தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கில் பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதனால் புட்லூர் ரயில் நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பாலப்பணி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

இதனால் ரயில் நிலையம் அருகில் இருந்த ரயில்வே கேட் முழுவதுமாக அகற்றப்பட்டது. தொடர்ந்து உயிர் சேதங்களை தவிர்க்க ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட ரயில்வே உயர்மட்ட பாலம் வழியாக மக்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டது.ஆனால் சில பயணிகள் ரயில்வே உயர்மட்ட பாலத்தை பயன்படுத்தாமல் அருகில் உள்ள தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். இதனால் பல உயிர் சேதங்கள் ஏற்படுகின்றன.

இதனை தடுக்கும் வகையில் ரயில்வே கேட் அகற்றப்பட்ட நிலையில் முழுவதுமாக யாராலும் தண்டவாளத்தை கடக்க முடியாதவாறு தடுப்பு அமைக்கப்பட்டது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், சைக்கிளில் செல்பவர்கள் மேம்பாலத்தின் மீது ஏறி மீண்டும் திரும்பி வரவேண்டிய நிலை உள்ளது. புட்லூர் ரயில் நிலையத்தில் அமைத்துள்ள உயர்மட்ட பாலத்தில் சாதாரண பயணிகள் ஏறி செல்ல ஏதுவாக இருக்கும்.

ஆனால் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், கர்ப்பிணி பெண்கள் இதில் ஏறி செல்ல முடியாத நிலையும் உள்ளது. அனைத்து ரயில் பயணிகளும் கண்டிப்பாக உயர்மட்ட பாலத்தை பயன்படுத்த வேண்டும் என்பதால் அவர்களுக்கு மாற்று வழி இல்லாத நிலையில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மாற்றுத்திறனாளிகள் மூத்த குடிமக்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் ரயிலில் இருந்து இறங்கி எளிதில் வெளியேற சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என்றும் இது குறித்து ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

The post உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டதால் புட்லூர் ரயில் நிலைய கேட் நிரந்தரமாக மூடல்: மாற்றுத்திறனாளிகள் முதியோர் அவதி appeared first on Dinakaran.

Tags : Putlur railway station gate ,Thiruvallur ,Putlur railway station ,Angalaparameshwari temple ,Kakalore Industrial Estate ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை...