×
Saravana Stores

செங்கல்பட்டு மாவட்டத்தில் 636 வருவாய் கிராமங்களில் ‘ஒரு கிராமம் ஒரு பயிர்’ புதிய திட்டம்: வேளாண்மை இணை இயக்குநர் தகவல்

 

செங்கல்பட்டு, மே 6: செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட 636 வருவாய் கிராமங்களில் ‘ஒரு கிராமம் ஒரு பயிர்’ புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று வேளாணமை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டின் உண்மையான முன்னேற்றம் கிராமங்களின் வளர்ச்சியில் உள்ளது என்ற காந்திய சிந்தனையின் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘ஒரு கிராமம் ஒரு பயிர் என்ற புதிய திட்டம் மாவட்டத்தில் உள்ள 636 வருவாய் கிராமங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தில், அனைத்து உதவி வேளாண்மை அலுவலர்களுக்கும் வருவாய் கிராமங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ஒவ்வொரு கிராமத்திலும் 5-10 ஏக்கர் வரை அப்பகுதியில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் பயிரின் செயல் விளக்க திடல் அமைக்கப்படும். இந்த செயல் விளக்க திடலில் விவசாயிகளுக்கு தேவையான பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள், நிலம் தயாரிப்பு, உயர் விளைச்சல் ரகங்கள் பயன்பாடு, விதை நேர்த்தி ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம், மண் பரிசோதனை அடிப்படையில் ஊட்டச்சத்து, களை மேலாண்மை, நீர் மேலாண்மை அனைத்து இனங்களிலும் தெரிவுப்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்த விவசாயிகளுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும்.

இதன்மூலம், 15 – 20 சதவீதம் கூடுதல் மகசூல் பெறுவது உறுதி செய்யப்படும். மேலும், இவ்வாறான செயல் விளக்க திடல்கள், உதவி வேளாண்மை அலுவலர்களால் வருவாய் கிராமத்தில் உள்ள இதர விவசாயிகளுக்கும் தொழில் நுட்பங்களை கடைபிடிக்க ஊக்குவிக்கப்படும்.
மேலும், செயல்விளக்க திடலில் பங்கு பெறும் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள், கடன் உதவி மற்றும் பயிர் காப்பீடு போன்றவற்றை பெற்று தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அறுவடை தினத்தன்று இதர விவசாயிகளும் அழைக்கப்பட்டு மகசூல் உயர்வினை கண்டுணர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தவிர ஒவ்வொரு வட்டாரத்திலும் 2 கிராமங்கள் தேர்ந்தெடுத்து, ஒரு ஏக்கர் பரப்புள்ள நிரந்தர வயல் அமைக்கப்பட்டு, பூச்சிகள் மற்றும் நோய்கள் கண்காணிக்கப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில் இத்திட்டமானது விவசாயிகளின் நன்மைக்காகவும், வாழ்வாதாரம் மேம்படுத்தவும் சிறப்பாக செயல்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் 636 வருவாய் கிராமங்களில் ‘ஒரு கிராமம் ஒரு பயிர்’ புதிய திட்டம்: வேளாண்மை இணை இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.

Tags : 636 Revenue ,Chengalpattu District ,Chengalpattu ,Joint Director of Agriculture ,Joint Director ,Ashok ,Revenue Villages ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டில் சாலை பாதுகாப்பு...