×
Saravana Stores

நில உரிமை சட்டம் குறித்து தவறான பிரசாரம் சந்திரபாபு நாயுடு, மகன் லோகேஷ் உட்பட 10 பேர் மீது வழக்கு: ஆந்திர மாநில சிஐடி போலீசார் நடவடிக்கை

திருமலை: நில உரிமை சட்டம் குறித்து தவறான பிரசாரம் செய்ததாக சந்திரபாபு நாயுடு, அவரது மகன் லோகேஷ் உள்பட 10 பேர் மீது ஆந்திர மாநில சிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆந்திராவில் இன்னும் 7 நாட்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள், தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் அந்தந்த அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் பிரசாரம் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் ஆணையத்திடம் முன் எப்போதும் இல்லாத வகையில் புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, நாரா லோகேஷ் ஆகியோருடன் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் நில உரிமைச் சட்டம் தவறானது என பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த சட்டத்தின் மூலம் விவசாயிகளின் நிலங்களை அரசு அபகரிக்க திட்டமிட்டு இருப்பதாக பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால் இது பொய் பிரசாரம் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மறுக்கிறது. இந்த விவகாரத்தில் முதல்வர் ஜெகன்மோகனும் விளக்கம் அளித்துள்ளார்.

அதே நேரத்தில் மறுபுறம், ஐவிஆர்எஸ் மூலம் தானியங்கி போன் அழைப்பு மூலம் வாக்காளர்களுக்கு நில உரிமைச் சட்டம் மூலம் உங்கள் நிலத்தை ஜெகன்மோகன் அபகரிக்க உள்ளதாகவும், எனவே சந்திரபாபுவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தொடர்ந்து அழைப்புகள் வந்தது. இதனால் தேர்தல் ஆணையத்திடம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதை ஆய்வு செய்த தேர்தல் ஆணையமும், மாநில தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ் குமார் மீனாவும் சிஐடி டிஜிக்கு நடவடிக்கை எடுக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி புகாரின் நகல் அனுப்பினார்.

இதனையடுத்து சிஐடி போலீசார் இந்த புகார்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதில் சந்திரபாபு நாயுடு, லோகேஷ் உட்பட 10 பேர் மீது தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் சிஐடி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ஐவிஆர்எஸ் போன் அழைப்புகளை செய்த ஏஜென்சி மீதும் சிஐடி வழக்குப் பதிவு செய்துள்ளது.

The post நில உரிமை சட்டம் குறித்து தவறான பிரசாரம் சந்திரபாபு நாயுடு, மகன் லோகேஷ் உட்பட 10 பேர் மீது வழக்கு: ஆந்திர மாநில சிஐடி போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chandrababu Naidu ,Lokesh ,Andhra Pradesh CIT ,Tirumala ,Andhra CIT police ,Andhra ,Andhra CIT ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…