×

ஓராண்டாக நடந்த வன்முறையை கண்டித்து மொட்டையடித்து போராட்டம் நடத்திய மணிப்பூர் பெண்கள்

இம்பால்: மணிப்பூரில் ஓராண்டாக நடந்த வன்முறையை கண்டித்து, அங்குள்ள பெண்கள் மொட்டையடித்து, கருப்பு உடையணிந்து சைக்கிள் பேரணி நடத்தினர். மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே கடந்த ஓராண்டாக வகுப்புவாத கலவரம் நடைபெற்று வருகிறது. இரு சமூகத்தினருக்கு இடையிலான வன்முறையில் இதுவரை 230 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இரு சமூகங்களையும் சேர்ந்த 70,000க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

மேலும் பல வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இந்நிலையில் இம்பாலின் மையப்பகுதியில் உள்ள செக்மாய் கிராமத்தை சேர்ந்த பெண்கள் சிலர், கடந்த ஓராண்டாக நடந்து வரும் வன்முறைக்கு எதிராக கருப்பு உடை அணிந்து கொண்டு செக்மாயில் இருந்து காங்லா வரை 19 கி.மீ தூரத்திற்கு சைக்கிளில் பேரணியாக சென்றனர். மேலும் அவர்களில் சிலர் மொட்டையடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘மணிப்பூர் மாநில பிரச்னைகளை கையாள்வதில், மாநில அரசு தோற்றுவிட்டது. உரிய தீர்வின் மூலமாக மாநிலத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மீட்டெடுக்க வேண்டும். மக்களிடையே ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வின் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ைசக்கிள் பேரணி மற்றும் மொட்டையடிக்கும் போராட்டத்தை நடத்தினோம்’ என்றனர்.

மோடியின் கண்ணாமூச்சி: மணிப்பூர் கலவரம் நடந்து ஓராண்டாகியும், பிரதமர் மோடி அங்கு எட்டிக் கூட பார்க்கவில்லை. இவ்விசயத்தில் பிரதமர் மோடியை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் மணிப்பூரைத் தவிர மற்ற மாநிலங்களுக்கு பிரதமர் மோடி 162 பயணங்களை மேற்கொண்டார். அதேபோல் 14 முறை வெளிநாடு ெசன்று வந்தார். அதாவது கடந்தாண்டு மே 3ம் தேதிக்கு பின்னர் நடந்த வன்முறை சம்பவங்களில் 230 பேர் பலியாகினர். 60,000 வீடுகள் தீயில் எரிந்து நாசமாக்கப்பட்டன. இவ்விசயத்தில் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் அல்லது மற்ற அமைச்சர்கள் மீது கூட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஆண்டு ராகுலின் பாரத் ஜோடோ நியாய யாத்ராவும் மணிப்பூரில் இருந்து தொடங்கியது. ஆனால் மோடி மணிப்பூர் செல்லாதது தற்போதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

The post ஓராண்டாக நடந்த வன்முறையை கண்டித்து மொட்டையடித்து போராட்டம் நடத்திய மணிப்பூர் பெண்கள் appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,Dinakaran ,
× RELATED மணிப்பூர் முதல்வர் வீடு அருகே பயங்கர தீ விபத்து