திருப்பூர், மே 5: திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கொசவம்பாளையம் பகுதியில் கடந்த ஜனவரி 30ம் தேதி ஸ்ரீ நாச்சிமுத்து என்பவர் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோல், தாயம்பாளையம் பகுதியில் கடந்த பிப்ரவரி 4ம் தேதி வடிவேலன் என்பவரின் வீட்டு பூட்டை உடைத்து 10 சவரன் தங்க நகை மற்றும் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற சம்பவம் குறித்தும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தர்மபுரி மாவட்டம் முள்ளுவாடி பகுதியை சேர்ந்த மணிமாது (55) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, மணிமாதுவை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
மணிமாது பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்பில் உள்ளதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா பரிந்துரையை ஏற்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் குண்டர் தடுப்பு சட்டம் உத்தரவை பிறப்பித்தார். இதன் பேரில், அவிநாசிபாளையம் போலீசார் கோவை மத்திய சிறையில் உள்ள மணிமாதுவிடம் இதற்கான ஆணையை ஒப்படைத்தார்.
The post திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர் மீது குண்டாஸ் appeared first on Dinakaran.