பள்ளிப்பட்டு, மே 5: நொச்சிலி சுற்று வட்டார கிராமங்களில் குறைந்தழுத்த மின் பிரச்னை தொடர்பாக கூடுதல் நேரம் மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்க ஏற்பாடு செய்யப்படும், என்று விவசாயிகளிடம் மின்வாரிய அதிகாரிகள் உறுதி அளித்தனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் நொச்சிலி, கிருஷ்ணமராஜ்குப்பம், காப்பூர் கண்டிகை, கொத்தூர், மிட்டூர், உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயத்திற்கு நிலவும் குறைந்தழுத்த மின் வினியோகம் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வரும் நாளை (6ம் தேதி) அத்திமாஞ்சேரிப்பேட்டை துணை மின் நிலையத்தில் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், விவசாய சங்க நிர்வாகிகளுடன் உதவி செயற்பொறியாளர் கண்ணன் நேற்று பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, சீரான மின்சாரம் வழங்கப்படாததால், விவசாய மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதாகிறது. இதனால், விளைநிலங்களுக்கு உரிய நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால் பயிர்கள் கருகி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். விவசாயிகள் கோரிக்கை ஏற்று விவசாயத்திற்கு கூடுதல் நேரம் மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்க ஏதுவாக செட்யூல் போட்டு 4 நாட்களில் சீரான மின் வினியோகம் வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை கைவிடுவதாக மின்வாரிய அதிகாரிகளிடம் விவசாயிகள் தெரிவித்தனர்.
* புதிய துணை மின் நிலையம் அமைய விவசாயிகள் முயற்சி தேவை
நொச்சிலி பகுதியில் குறைந்தழுத்த மின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஜிபிஆர் கண்டிகை பகுதியில் கடந்த 2017ல் 110 கேவி திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்க அனுப்பப்பட்ட முன்மொழிவு மின்சார வாரியத்தால், வருவாய் துறைக்கு பணம் கட்ட முடியாத நிலையில் அந்த பணி நிலுவையில் உள்ளதாகவும், புதிய துணை மின் நிலையம் பணிகள் தொடங்க விவசாயிகள் சங்கம் முயற்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
The post குறைந்தழுத்த மின் பிரச்னை கூடுதல் நேரம் மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்க ஏற்பாடு: விவசாயிகளிடம் மின்வாரிய அதிகாரிகள் உறுதி appeared first on Dinakaran.