செங்கல்பட்டு. மே 5: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நேற்று இரவு 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம் திருமால்பூர் மற்றும் சென்னை கடற்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சார ரயில்கள் காலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை வந்து செல்கின்றன.
அதுமட்டுமின்றி சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி, மதுரை, நாகர்கோவில், தஞ்சாவூர் உள்ளிட்ட தென் மாவட்டத்தை நோக்கி பல்வேறு பகுதிகளுக்கு விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்களும் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன.
இங்கு விடியற்காலை முதல் நள்ளிரவு வரை எந்நேரமும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். குறிப்பாக காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை கூட்டம் நிரம்பி காணப்படும்.
இந்நிலையில் நேற்று செங்கல்பட்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு வேலை நிமித்தமாக சென்றவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று திரும்பிய மாணவர்கள் ரயில்களில் வந்திறங்கும் நேரமான மாலை 6 மணியில் முதல் இரவு 8 மணி வரை ரயில் நிலையத்தில் மின்தடை ஏற்பட்டதால் கும்மிருட்டில் பயணிகள் செல்போன் வெளிச்சத்தில் திருட்டு அச்சத்துடன், தட்டுத்தடுமாறி சென்றனர். இதனால் ரயில் நிலையம் முழுவதும் பயணிகள் மத்தியில் பரபரப்பு நிலவியது.
The post செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இரவு மின்தடையால் பயணிகள் அவதி appeared first on Dinakaran.