- அமைச்சர்
- ரோஜா
- நாகாரி
- திருமலா
- YSR காங்கிரஸ்
- ஆந்திரப் பிரதேசம்
- சித்தூர் மாவட்டம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஆந்திரா
திருமலை: ஆந்திராவில் நகரி சட்டப்பேரவை தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அமைச்சரும் நடிகையுமான ரோஜா மீண்டும் போட்டியிடுகிறார். அவர் போட்டியிடும் இத்தொகுதி தமிழக – ஆந்திர மாநில எல்லை சித்தூர் மாவட்டத்தில் உள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநில அரசியல் தலைவர்களில் அதிகம் பேசப்படுபவராக இருந்து வருபவர் நடிகை ரோஜா. இவர் சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசுக்கு மாறினார். அதன்பின்னர் ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இணைந்தார். தற்போது நகரி தொகுதி எம்எல்ஏவாகவும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் உள்ளார். இந்த தொகுதியில் 2014, 2019ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் நின்று தொடர்ந்து வெற்றி பெற்றார்.
இந்த தொகுதியில் பல ஆண்டுகளாக குடிநீர் பிரச்னை உள்ளது. ஜவுளி பூங்கா அமைத்து தரும்படி அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் அதனை ரோஜா நிறைவேற்றவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். நெசவு தொழிலுக்கு இலவச மின்சாரம் தருவதாக கூறிவிட்டு ஆட்சிக்கு வந்தவுடன் மின் கட்டணத்தை உயர்த்தியதுதான் மிச்சம் என தெரிவிக்கின்றனர். மேலும் நகரி தொகுதியில் தொழில் வளர்ச்சி குன்றியதால் அங்கு வசித்து வந்த பலர் சென்னைக்கு இடம் பெயர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வரும் 13ம்தேதி நடக்க உள்ள தேர்தலை முன்னிட்டு அமைச்சர் ரோஜா, பல இடங்களில் தீவிர வாக்கு சேகரித்து வருகிறார். இவரை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சியில் காலி பானுபிரகாஷ் மீண்டும் களம் காண்கிறார். ரோஜாவுக்கு ஆதரவாக வாக்குசேகரிக்க சொந்த கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் பலர் ஆர்வம் காட்டவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் ரோஜா தனியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
இதற்கு காரணம் அண்மையில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ரோஜா, `என்னை எதிரியாக கருதாமல் சொந்த கட்சியினர் தேர்தல் வேலை செய்தால் ஹாட்ரிக் வெற்றி பெறுவேன். அவ்வாறு தேர்தல் பணி செய்யாமல் ஒதுங்கினால் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என பேசினார். இந்த பேச்சு அவரது கட்சியினரை கடும் ஆத்திரமடைய ெசய்தது. இதனால் முக்கிய நிர்வாகிகள் பலர் தேர்தல் பணியை புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது சொந்த கட்சியினரின் சூழ்ச்சியால் ரோஜாவின் வெற்றி கேள்விக்குறியாக உள்ளதால் அவர் கடும் அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறுகையில், ‘அமைச்சர் ரோஜாவுக்கு அவரது கட்சியை சேர்ந்தவர்களே எதிரிகளாக செயல்படுகின்றனர். இந்த தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 4 பிரிவாக உள்ளது. கோஷ்டி பூசல்களால் ரோஜாவின் வெற்றிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக சட்டமன்ற தொகுதியில் ஒவ்வொரு மண்டலத்திலும் ரோஜாவுக்கு சொந்த கட்சியை சேர்ந்தவர்களே பலமான எதிரிகளாக உள்ளனர். 2வது முறையாக வெற்றி பெற்றபிறகு சொந்த கட்சியினரை அவர் மதிக்கவில்லை. குறிப்பாக ரோஜாவின் சகோதரர்கள் தலையீடு அதிகம் உள்ளது. எனவே ரோஜாவுக்கு சீட் தருவதை தடுப்போம் என சொந்த கட்சியினரே சில மாதங்களுக்கு முன்பு பகிரங்க சவால் விட்டனர். இருப்பினும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் நகரி தொகுதியில் உள்ள ஆளும் கட்சி கவுன்சிலர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மூத்த நிர்வாகிகள் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தனர். கடும் எதிர்ப்பு காரணமாக ரோஜாவுக்கு பின்னடைவு பலமாக உள்ளதாகவே கருதப்படுகிறது’ இவ்வாறு தெரிவித்தனர்.
The post சொந்த கட்சியிலே கடும் எதிர்ப்பு: நகரியில் தேறுவாரா அமைச்சர் ரோஜா; தனியாக வாக்கு சேகரிப்பு appeared first on Dinakaran.