×
Saravana Stores

மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பாஜ பிரமுகர்: அலுவலகத்தில் இருந்த நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு; கூலிப்படை கும்பலுடன் தலைமறைவானவருக்கு வலை

சூலூர்: கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள கருமத்தம்பட்டி கோதைபாளையம் பகுதியில் அன்னூரை சேர்ந்த செல்வராஜ் என்பவர் பஞ்சாலை வைத்து நடத்தி வருகிறார். இவர் இதற்கு முன்னதாக இதே ஊரை சேர்ந்த அங்கமுத்து என்பவரிடம் இந்த மில்லை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்த நிலையில் அங்கமுத்து சரியாக கடனை அடைக்காததால் மில்லை வங்கி ஜப்தி செய்து உள்ளது. ஜப்தி செய்த மில்லை வங்கி நிர்வாகம் ஏலத்தில் விட்டுள்ளது. அந்த சமயத்தில் மில்லை அப்போது வாடகைக்கு பயன்படுத்தி கொண்டிருந்த செல்வராஜ் அந்த மில்லை வங்கியில் போதுமான தொகையை கட்டி ஏலத்தில் எடுத்து இவரது பெயருக்கு கிரயம் செய்துள்ளார். இதனால், முன்னாள் உரிமையாளர் அங்கமுத்துவுக்கு, செல்வராஜ் மீது மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, அடிக்கடி செல்வராஜ் உடன் தகராறு செய்வதும் அவரது மில்லில் பணிபுரியும் தொழிலாளர்களை மிரட்டி துரத்தி விடுவது, தாக்குவதுமாக தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.

இதுதொடர்பாக கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை அங்கமுத்து மற்றும் அதே பகுதியை சேர்ந்த பாஜ பிரமுகர் வினோத் தலைமையிலான கூலிப்படையினர் 5 பேர் அதிரடியாக மில்லுக்குள் புகுந்து அங்கு அலுவலகத்தில் இருந்த செல்வராஜ் மற்றும் பணியில் இருந்த வடமாநில தொழிலாளர்களை தாங்கள் தயாராக கொண்டு சென்ற இரும்பு ராடு, கத்தி, அரிவாளால் பயங்கரமாக தாக்கியும், வெட்டியும் உள்ளனர். இதில் செல்வராஜூக்கு நெற்றி, முதுகு, கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. விரட்டி அடிக்கப் பட்ட வடமாநில தொழி லாளர்கள் கை குழந்தைகளுடன் கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு வந்து நடந்த சம்பவங்களை கூறியுள்ளனர். போலீசார் மில்லுக்கு சென்று பார்த்தபோது செல்வராஜ் மில்லில் உள்ள அலுவலகத்தில் இருந்த 3 பவுன் செயின் மற்றும் 2 மோதிரங்கள் புதிதாக கிரயம் செய்யப்பட்ட பத்திரம் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அங்கமுத்து மற்றும் பாஜ பிரமுகர் வினோத் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

The post மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பாஜ பிரமுகர்: அலுவலகத்தில் இருந்த நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு; கூலிப்படை கும்பலுடன் தலைமறைவானவருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : BJP ,North State ,Sulur ,Selvaraj ,Annoor ,Panchal ,Karumathambatti Gothaipalayam ,Sulur, Coimbatore ,Angamuthu ,
× RELATED பயணிகள் பட்டாசு எடுத்துச் செல்ல தடை: ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை