×
Saravana Stores

இந்திரா காந்தி, சோனியா காந்தி இருவரும் பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி மக்களவைத் தொகுதியில் களம் இறங்கினார் ராகுல் காந்தி!!

புதுடெல்லி : உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காத்தி வேட்புமனுவை தாக்கல் செய்தார். கடந்த 2004ம் ஆண்டு முதல் 2019 வரையில் அமேதி தொகுதி எம்பியாக இருந்த ராகுல் காந்தி, 2019 தேர்தலில் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். எனினும், கேரள மாநிலம் வயநாட்டில் வெற்றி பெற்று எம்பியானார்.இந்நிலையில், தென் மாநிலங்களில் மட்டும் ராகுல் போட்டியிடுவது இந்தி பேசும் மாநிலங்களில் காங்கிரசின் வலிமையைக் குறைக்கும் என்று காங்கிரசின் சில தலைவர்கள் கூறிவருகின்றனர். இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியைக் குடும்பக் கட்சி என்று பிரதமர் மோடி தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதால், ஒரே குடும்பத்தில் மூவர் (சோனியா, ராகுல், பிரியங்கா) நாடாளுமன்ற உறுப்பினராக தேவையில்லை என்று ராகுல் காந்தி கருதுவதாகவும், அதனால் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவதை விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த இரு தொகுதிகளுக்கும் இன்று மாலையுடன் வேட்புமனு தாக்கல் முடிவடையும் என்பதால், அனைத்து ஏற்பாடுகளையும் உள்ளூர் காங்கிரசார் தயார் நிலையில் வைத்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக இன்று காலை காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிவிப்பில், ‘ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தியும், அமேதி தொகுதியில் கிஷோரி லால் சர்மாவும் (கே.எல்.சர்மா) போட்டியிடுகின்றனர்’ என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் தொண்டர்கள் புடைசூழ சென்று உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காத்தி வேட்புமனு தாக்கல் செய்தார். காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தாயார் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தியுடன் சென்று ராகுல் காந்தி வேட்புமனுவை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார். அதே போல் உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மா வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். இதனிடையே மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை. சோனியா காந்தி ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திரா, சோனியா வென்ற தொகுதியில் ராகுல் போட்டி

இந்திரா காந்தி, சோனியா காந்தி இருவரும் பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற, காங்கிரஸின் கோட்டையாக கருதப்படும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் களம் காண்கிறார் ராகுல் காந்தி. 1967, 1971, 1980ம் ஆண்டுகளில் இந்திரா காந்தியும், 2004, 2006, 2009, 2014, 2019 சோனியா காந்தியும் இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர்.

கே.எல்.சர்மா யார்?

அமேதியில் போட்டியிடும் கே.எல்.சர்மா, பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்தவர் ஆவார். ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியின் பிரதிநிதியாக நீண்ட காலம் பணியாற்றினார். கடந்த 1983ம் ஆண்டு ராஜீவ் காந்தியுடன் சென்ற கே.எல்.சர்மா, ரேபரேலி, அமேதி மக்களிடம் அறிமுகமானார். ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பிறகு அவர் சோனிய காந்தி குடும்பத்துடன் நெருங்கமானார். அடிக்கடி அமேதி மற்றும் ரேபரேலிக்கு சென்று வரும் கே.எல்.சர்மா, பீகார் மாநிலத்தின் பொறுப்பாளராகவும், பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் உள்ளார். தேர்தல் நிர்வாகத்தில் நிறைய அனுபவம் பெற்ற அவர், தற்போது அமேதியில் களம் காண்கிறார்.

2 பாஜக வேட்பாளர்கள் யார்?

அமேதியில் காங்கிரஸ் சார்பில் கே.எல்.சர்மா போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து ஒன்றிய பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி களம் காண்கிறார். அதேபோல் ரேபரேலியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து பாஜக சார்பில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே 2019 தேர்தலில், அப்போதைய ரேபரேலி காங்கிரஸ் வேட்பாளரான சோனியா காந்தியிடம் தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post இந்திரா காந்தி, சோனியா காந்தி இருவரும் பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி மக்களவைத் தொகுதியில் களம் இறங்கினார் ராகுல் காந்தி!! appeared first on Dinakaran.

Tags : Indira Gandhi ,Sonia Gandhi ,Raybareli Lok Sabha ,Rahul Gandhi ,New Delhi ,Rahul Kathi ,Uttar Pradesh ,Repareli ,Amethi ,BJP ,Smriti Irani ,2019 ,
× RELATED ஆணாதிக்கம் தடையாக இருந்திருந்தால்...