×

திருமுறைகளில் கஜசம்ஹாரம்

சிவபெருமானின் வீரச் செயல்களில் ஒன்றான ‘‘கரியுரித்த வரலாறு’’ திருமுறையில் பல இடங்களில் காண்கிறோம். இவற்றில் யானையின் வேகமும், அதன் கோபமும், அதன் ஆற்றலும் சிவபெருமான் அதனை அலறக் கொன்று அதன் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டதும், திரும்பத் திருப்பப் பேசப்பட்டுள்ளன. திருஞானசம்பந்தர் யானை எட்டு திசையும் அஞ்ச மேகம் போல் வந்தது என்று பொருள்பட (திருப்புறவப்பதிகத்தில்)

‘‘எண்டிசையோர் அஞ்சிடுவகை கார்சேர் வரையென்ன
கொண்டெழு கோல முகில்போல் பெரிய கரி’’

என்றும், (எட்டுத்திசையிலுள்ளவர்களும் அஞ்சும்படியாக கருமை சேர்ந்த மலைபோலப் பொங்கி எழுந்த மேகக் கூட்டத்தைப் போல முழங்கி வரும் பெரிய யானை) வந்த யானையை அனுப்பியவர்கள் மாறுபட்ட கொள்கைகொண்ட வேதியர்கள் என்பதைத் திருஞானசம்பந்தர்,

‘‘மாறுபட்ட வனத்தகத்தில் மருவ வந்த வன்களிற்றை’’

என்றும், தாருகாவனத்து முனிவரிடமிருந்து வந்த வன்மையான களிறு. அது கோபத்தோடும் அறிவு மயங்கியும் வந்ததென்பதை;
‘‘வன்மால் களி யானை’’ என்றும்,
அதன் வேதத்தைக் கண்டு பார்வதி மனம் தடுமாறினாள் என்பதை (முதுகின்றப் பதிகத்தில்)
‘‘இமவான் மகள் பெரிய மனம் தடுமாற’’ என்றும், அந்த யானை மீது போரிட்டு, அது அலறும் வண்ணம் அதைப் பிளந்து தோலைப் போர்த்திக் கொண்டார் என்பதை (ஆரூர் பரவையுண் மண்தளிப் பதிகத்தில்)

‘‘செழுமால் கரி அலறப் பொங்கிய போர்புரிந்து
பிளந்து ஈருரி போர்த்ததென்னே’’

என்றும், குருதி சொட்டும் தோலை இறைவன் போர்த்துக் கொண்டார் என்பதை எதிர் கொள் பாடிப் பதிகத்தில்,‘‘குருதிசோர ஆனையின் தோல் கொண்ட குழற் சடையன்’’ என்றும், அவர் யானையோடு போரிட்டு அதன் தோலை உரித்தது கண்டு உமை அஞ்சி நடுங்கினாள் என்பதை நாவலூர் பதிகத்தில்,

‘‘தடுக்க ஒண்ணாதோர் வேழத்தினை உரித்திட்டுஉமை
நடுக்கம் கொண்டார்’’

என்றும், உமையவளின் நடுக்கத்தைத் தீர்த்து அவளை ஓர் பாகமாகக் கொண்டு யானைத் தோலைப் போர்த்துக் கொண்டார் என்பதை,

‘‘வளைக்கை மங்கை நல்லாளை ஓர்பாகமாய்
தொளைக்கை யானைத் துயர்படப் போர்த்தவன்’’

என்றும், திரும்பத் திரும்ப பல இடங்களில் திருஞானசம்பந்தர் அருளிச் செய்கின்றார்.
அப்பரடிகள் பல இடங்களில் இந்த வரலாற்றைக் கூறியிருந்தாலும், திருச்சேறையில் அவர் அருளிய பாடல் தனியிடத்தைப் பெறுகின்றது. இதில் பைரவ வேடத்துடன் சூலம், டமருகம், கங்கைதரித்து யானையை உரித்தார் என்றும் அதைக் கேட்டு உமை அஞ்ச தனது மணிவாயைத் திறந்து சிரித்தார் என்றும்குறிக்கின்றார்.

‘‘விரித்த பல்கதிர் கொள் சூலம் வெடிபடு தமரு கங்கை
தரித்ததோர் கோலகால பைரவனாகி வேழம்
உரித்து உமை அஞ்சக் கண்டு ஓண்திரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வளாரே’’

என்றும், குறிக்கின்றார்.
வழுவூரிலுள்ள கஜசம்ஹார மூர்த்தம் இந்தப் பாடலின் படியே அமைந்துள்ளது குறிப்பிடத்
தக்கதாகும்.

நாகலட்சுமி

 

The post திருமுறைகளில் கஜசம்ஹாரம் appeared first on Dinakaran.

Tags : Gajasamharam ,Thirumyam ,Lord Shiva ,Thirumi ,
× RELATED திருத்தெற்றியம்பலம் பள்ளிகொண்ட பெருமாள்