×

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அத்துமீறி நுழைந்து சாலை அமைக்கும் சீனா : ஒன்றிய அரசு கண்டனம்

ஸ்ரீநகர் : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா அத்துமீறி நுழைந்து சாலை அமைத்துள்ளதற்கு ஒன்றிய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய எல்லையில் சீனா அத்துமீறி பல்வேறு கட்டுமானங்களை செய்து வருவதால் இரு நாடுகள் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன வீரர்கள் இடையே நடைபெற்ற மோதல்களுக்கு பிறகு, எல்லைப் பகுதிகளில் புதிய சாலை, பாலம் அமைக்கும் பணிகளை சீனா மேற்கொண்டு வருவது செயற்கைகோள் படங்கள் மூலம் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதியில் சீனா புதிய சாலை ஒன்றை அமைத்துள்ளது செயற்கைகோள் படங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சியாச்சின் பனிப்பாறையில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கின் அடிவாரத்தில் அத்துமீறி நுழைந்து சீனா புதிய சாலை அமைத்துள்ளதை செயற்கைகோள் படங்கள் உறுதி செய்துள்ளன. பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் மாகாணத்தை சீனாவின் சின்ஜியாங் உடன் இணைக்கவே இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சீனாவின் சாலை கட்டுமானம் மேற்கொண்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை நிர்மாணிப்பதன் மூலம் அப்பகுதியில் இந்தியாவுக்கு இருக்கும் உரிமையை மாற்ற சீனா சட்டவிரோதமாக முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் 1963ம் ஆண்டு எல்லை ஒப்பந்தப்படி பாகிஸ்தான் அதனை சீனாவிடம் ஒப்படைத்துவிட்டது என்ற கூற்றை இந்தியா ஏற்காது என்றும் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

The post பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அத்துமீறி நுழைந்து சாலை அமைக்கும் சீனா : ஒன்றிய அரசு கண்டனம் appeared first on Dinakaran.

Tags : China ,Kashmir ,Union Government ,Srinagar ,Pakistan ,Indian border ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தான், சீனாவுக்கு இந்தியா கண்டனம்