மும்பை: சீனாவை போல் வளர வேண்டுமானால் பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றம் தேவை என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து தெரிவித்தார். ஒன்றிய பட்ஜெட்டு நாளை மறுநாள் தாக்கல் ெசய்யப்பட உள்ள நிலையில், ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘சீனாவின் பொருளாதார நிலைமை தற்போது மிக வேகமாக மாறி வருகிறது. கொரோனாவுக்கு பிறகு சீனாவுடன் பல நாடுகள் வர்த்தகம் செய்ய ஆர்வம் காட்டவில்லை. அதனால் சீனாவின் பல நிறுவனங்கள் மூடப்பட்டன. சீனர்கள் தங்கள் நாட்டின் வளர்ச்சியில் அதிகம் கவனம் செலுத்துகின்றனர்.
அதற்காக அவர்களின் சித்தாந்தத்தை கூட தள்ளி வைத்துவிடுகின்றனர். எனவே சமூகத்தில் இருக்கும் வறுமை, பொருளாதார மற்றும் சமத்துவமின்மையைக் குறைக்கக்கூடிய பொருளாதார நாடாக நாம் மாற வேண்டும். வறுமையை போக்க வேண்டுமானால், மூலதன முதலீட்டை ஈர்க்க வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும், நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளில் அதிக நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுவர வேண்டும். விவசாயம், கிராமப்புற மற்றும் பழங்குடியினத் துறைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தொழில்நுட்பத்தில் சீனா முன்னணியில் உள்ளது. அதற்கு போட்டியாக இந்தியா உருவாக வேண்டும். அண்டை நாடுகளுடன் போட்டியிடும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக ஆட்டோமொபைல் துறையில் இந்தியா உலகின் மூன்றாவது இடத்தில் உள்ளது’ என்றார்.
The post சீனாவை போல் வளர வேண்டுமானால் பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றம் தேவை: ஒன்றிய அமைச்சர் கருத்து appeared first on Dinakaran.