கீழ்பென்னாத்தூர், மே 3: கீழ்பென்னாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயிலால் பாசனத்திற்கு தண்ணீரின்றி பயிர்கள் கருகி வருகின்றன. எனவே, கால்நடைகளுக்கு தீவனமாக நிலத்தில் மேயவிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. குறிப்பாக கொளத்தூர், வேடநத்தம், மேக்களூர், கீக்களூர், நாரியமங்கலம், கார்ணாம்பூண்டி உட்பட பல்வேறு கிராமங்களில் நெல், கரும்பு, மணிலா உள்ளிட்ட பயிர்களுடன் தோட்டக்கலை பயிர்களான வெண்டை, அவரை, கத்தரி ஆகியவற்றையும் விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை வெயில் 105 டிகிரியை கடந்து சுட்டெரித்து வருகிறது.
அதிகபட்சமாக நேற்று முன்தினம் 107.6 டிகிரியும் நேற்று 108.6 டிகிரியும் வெயில் பதிவானது. இதனால், விவசாய கிணறுகளில் போதிய அளவு நீர் இல்லாமல் காணப்படுகிறது. மேலும், விவசாய நிலங்கள் வறண்டுபோய் பாளம் பாளமாக வெடிக்கும் நிலை உள்ளது. இதேபோல், ஆறு, குளம், குட்டை உட்பட நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. பருவ மழை மற்றும் நிலத்தடி நீரை நம்பி விவசாயம் செய்த விவசாயிகள் பாசனத்திற்கு போதிய அளவு தண்ணீர் இல்லாததால் நிலத்தில் பயிரிட்ட பயிர்கள் காய்ந்து கருகுவதை கண்டு மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். மேலும், கடன் வாங்கி பயிரிடப்பட்ட பயிர்கள் காய்ந்து வீணாவதால் தங்களது ஆடு, மாடுகளுக்கு தீவனமாக மேயவிடும் சோக நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதுபோன்ற நிலை இனி ஏற்படாமல் இருக்க மழைநீர் வடிகால் கால்வாய்களில் குடிமராமத்து பணி செய்ய வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும்பட்சத்தில் மழைக்காலங்களில் பெய்யும் மழையை சேகரித்து வைத்து கோடைகாலத்தில் குடிநீர், விவசாயம் போன்றவற்றுக்கு பயன்படுத்துவதற்கு உதவிகரமாக அமையும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
The post விவசாய பாசனத்திற்கு தண்ணீரின்றி கருகும் பயிர்கள் கால்நடைகளுக்கு தீவனமான மேயவிடும் சோகம் சுட்டெரிக்கும் வெயிலால் வறண்டும் வரும் நீர்நிலைகள் appeared first on Dinakaran.