×

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் கல்குவாரிக்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

 

திருப்பூர், மே 3: திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவுக்கு உட்பட்ட கோடங்கிப்பாளையத்தில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. சட்ட விரோதமாக கனிம வளத்தை கல்குவாரி கொள்ளையடித்து வருவதாக பலமுறை புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த குவாரிக்கு எதிராக விஜயகுமார் தொடர் உண்ணாவிரத போாட்டத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கல்குவாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இருப்பினும் உடனடியாக கல்குவாரி உரிமையாளர் மீது குற்ற வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

அதற்கு உடந்தையாக இருந்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். பின்னர் தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன் மற்றும் போலீசார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் பிறகு ஆர்ப்பாட்டம் நடத்தி திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜை சந்தித்து மனு கொடுக்க வைத்தனர். கல்குவாரி உரிமையாளர் மீது குற்ற வழக்குப்பதிவு செய்ய வேண்டும். கல் குவாரிகளில் சட்ட விரோதமாக வெடி மருந்து நடமாட்டத்தை கட்டுப்படுத்த மாநில அளவில் முக்கியத்துறை சார்ந்த உயர்மட்ட சிறப்பு குழுவை ஏற்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் முறையிட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்ததை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு கலைந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

The post திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் கல்குவாரிக்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Kalquari ,Tirupur Collector ,Tirupur ,Kodangipalayam ,Palladam ,Tirupur district ,Vijayakumar ,
× RELATED கல்குவாரியில் பாறைகளை உடைக்கும்போது வெடி விபத்து!