பெரம்பூர்: கட்சி பேனரில் பெயர் போடுவதில் ஏற்பட்ட தகராறில் அதிமுக பிரமுகரின் மண்டையை உடைத்த அக்கட்சியின் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதிமுக சார்பில் திருவிக நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் தண்ணீர் பந்தல் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். இதற்காக ஒவ்வொரு இடத்திலும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஓட்டேரி மேட்டுப்பாளையம் பங்காரு தெருவைச் சேர்ந்த பக்தவச்சலம் (52) என்பவர் மேட்டுப்பாளையம் போலீஸ் பூத் அருகே பேனர் ஒன்றை வைத்திருந்தார். இவர் அதிமுக வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட பிரதிநிதியாக உள்ளார். அதே பகுதியில் வசிக்கும் பிரகாஷ் (30) என்பவர், வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளராக உள்ளார். பக்தவச்சலம் வைத்த பேனரில் பிரகாஷின் பெயரை சிறியதாக போட்டிருந்தார். இதற்கு, பேனரில் ஏன் எனது பெயரை சிறிதாக போட்டாய் எனக்கூறி பக்தவச்சலத்திடம் பிரகாஷ் கேட்டுள்ளார். அப்போது இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
ஒரு கட்டத்தில் பிரகாஷ் பக்தவச்சலத்தை தலையில் கடுமையாக தாக்கியதால் மண்டை உடைந்தது. இதனையடுத்து பக்தவச்சலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, இதுகுறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஓட்டேரி போலீசார் நேற்று முன்தினம் பிரகாஷை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். பேனரில் பெயர் போடும் தகராறில் அதிமுகவினர் மோதிக்கொண்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post கட்சி பேனரில் பெயர் போடுவதில் தகராறு அதிமுக பிரமுகர் மண்டை உடைப்பு: இளைஞரணி துணை செயலாளர் மீது வழக்கு appeared first on Dinakaran.