* இந்த ஆண்டும் விவசாயம் ‘அம்போ’ விவசாயிகள் கவலை
மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணிகள் எப்போது முடிவடையும் என விவசாயிகள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. மழை காலத்திற்குள் சீரமைப்பு பணிகள் முடியவில்லை என்றால் இந்த ஆண்டும் விவசாயம் கேள்வி குறியாகிவிடும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, பொதுப்பணி துறை அதிகாரிகள் விரைந்து பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி 2,600 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் மூலம் மதுராந்தகம், காந்திநகர், முன்னூத்திகுப்பம், அருங்குணம், காவாதூர், தேவாதூர், முள்ளி, வளர்பிறை உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. ஆண்டுதோறும் மழைக்காலங்களில் இந்த ஏரி நிரம்புவதால், இங்கு மூன்று போகம் நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் விளைவிக்கப்பட்டு வந்தன.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஏரி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்ததனால், ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு தொடர் கோரிக்கை வைத்து வந்தனர். மேலும் தினகரன் நாளிதழிலும் அவ்வப்போது படத்துடன் செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில், இந்த ஏரியை தூர்வாரி சீரமைக்க தமிழக அரசு சார்பில் ரூ120 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகிறது. மேலும், சீரமைப்பு பணிக்காக ரூ43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுளளதாகவும் பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதைத்தொடர்ந்து, கடந்த 2022ம் ஆண்டு ஏரியில் தூர்வாரும் பணிகள் துவங்கியது. இந்த பணிகள் அனைத்தையும் 2024ம் ஆண்டு
ஜூலை மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். பணிகள் நிறைவு பெற இன்னும் 2 மாதங்களே உள்ளன. ஆனாலும், பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பது என்பது சாத்தியம் இல்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், சீரமைப்பு பணிகள் துவங்கிய காரணத்தினால் ஏரியில் மழைநீரை தேக்கி வைக்க முடியாதநிலை இருந்தது. இதனால், இந்த ஏரிநீர் பாசனத்தை கொண்டு விவசாயம் செய்து வந்த ஏராளமான விவசாயிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இதேநிலை, இந்த ஆண்டு நீடிக்க கூடாது தங்களின் விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வந்தது. இதுகுறித்து மதுராந்தகம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த ஏரியில் மேற்கொள்ள வேண்டிய பணிகளில் தற்போது வரை 87 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த ஏரி சீரமைப்பு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ120 கோடியில் 12 சதவீதம் மட்டுமே தூர்வாரும் பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற நிதி ஏரியின் பல்வேறு சீரமைப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. தற்போது, மேலும் ரூ43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 2600 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் 576 ஏக்கர் பரப்பளவில் தூர்வார முடிவு செய்யப்பட்டு, தற்போது, 250 ஏக்கர் பரப்பளவில் சுமார் இரண்டு அடி வரை தூர்வாரப்பட்டுள்ளது. மற்ற பணிகள் இன்னும் சில தினங்களில் முடிவடையும். ஏரியில் அமைந்துள்ள ஐந்து மதகுகளில் இரண்டாவது மதகு மட்டும் அகற்றி விட்டு புதியதாக கட்டப்படுகிறது. மற்ற மதகுகள் பழுது பார்க்கப்படுகிறது. மேலும், ஏரியின் முன்கரை பகுதிகள் அமைந்துள்ள மதுராந்தகம், மேச்சேரி, புதுப்பட்டு, பசும்பூர், பிள்ளாஞ்சி குப்பம், குன்னவாக்கம், வேடந்தாங்கல், தண்டரை, மலை பாளையம் ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள 18 கிமீ நீளம் கொண்ட முன்கரை பகுதிகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மேலும், 14 மீட்டர் உயரம் கொண்ட ஷட்டர் அமைக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.
எனவே, குறிப்பிட்ட கால இலக்கான வரும் ஜூலை மாதத்துக்குள் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, ஏரியில் 50 முதல் 60 சதவீதம் அளவிற்கு தண்ணீர் சேர்த்து வைக்கப்படும். இந்த தண்ணீர் விவசாயம் பாசனத்திற்கு மதகுகள் மூலம் திறந்து விடப்படும். இதன் மூலமாக இந்த ஆண்டு விவசாயிகள் தங்களின் விவசாய பணிகளை வழக்கம்போல் மேற்கொள்ள முடியும்’ என அவர்கள் உறுதி அளித்தனர். இதன் மூலம் இந்த ஏரியை நம்பியுள்ள விவசாயிகள் ஓரளவு நிம்மதியடைந்துள்ளனர். மேலும் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள ஏரிக்கரையில் தார்சாலை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.
* செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி 2,600 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் மூலம் மதுராந்தகம், காந்திநகர், முன்னூத்திகுப்பம், அருங்குணம், காவாதூர், தேவாதூர், முள்ளி, வளர்பிறை உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.
* கடந்த 2022ம் ஆண்டு ஏரியில் தூர்வாரும் பணிகள் துவங்கியது. இந்த பணிகள் அனைத்தையும் 2024ம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். பணிகள் நிறைவு பெற இன்னும் 2 மாதங்களே உள்ளன. ஆனாலும், பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பது என்பது சாத்தியம் இல்லை என கூறப்படுகிறது.
The post மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணிகள் முடிவடைவது எப்போது?.. விரைந்து முடிக்க கோரிக்கை appeared first on Dinakaran.