- திருவேக்காடு கூவம்
- கோட்டாட்சியர்
- பூந்தமல்லி
- கூகம் நதி
- திருவேக்காடு
- பெருமாள் கோயில் தெரு
- திருவேக்காடு பேரூராட்சி
- கூவம் ஆற்றங்கரை
- திருவேகாடு கூவம்
பூந்தமல்லி: திருவேற்காடு கூவம் ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்புகளை அகற்ற கணக்கெடுக்க வந்த கோட்டாட்சியரை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பெருமாள் கோயில் தெரு பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குறிப்பாக கூவம் நதிக்கரையை ஒட்டி மேடான பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் எனவும், நீர் பிடிப்பு பகுதிகளில் இந்த குடியிருப்புகள் இருப்பதாக கூறி வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வருவாய் கோட்டாட்சியர் கற்பகம் தலைமையில் பூந்தமல்லி தாசில்தார் கோவிந்தராஜ் மற்றும் வருவாய் துறையினர், பொதுப்பணி துறையினர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று வீடுகளை கணக்கெடுக்கும் பணிக்காக குடியிருப்பு பகுதிக்கு வந்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கோட்டாட்சியரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வீடுகளை அகற்றுவது குறித்த உத்தரவு நகலை பொதுமக்கள் கேட்டனர். அதற்கு ஆன்லைனில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் என்று அதிகாரிகள் கூறியதால் பொதுமக்கள் ஆத்திரமடைந்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். திருவேற்காடு நகர மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி, துணைத்தலைவர் ஆனந்தி ரமேஷ் , காங்கிரஸ் மாவட்ட முன்னாள் தலைவர் லயன் ரமேஷ் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு ஆதரவாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பும் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: திருவேற்காடு கூவம் நதிக்கரையை ஒட்டியுள்ள மேடான இடத்தில் குடியிருப்புகள் உள்ளது. மழை வெள்ளத்தின் போதும் இப்பகுதி பாதிக்கப்படவில்லை. திருவேற்காட்டின் பூர்வ குடிகளான நாங்கள் பரம்பரை பரம்பரையாக 200 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் நிலையில், எங்களின் குடியிருப்புகளை அகற்றக்கூடாது.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனு அளித்துள்ளோம். ஆனால், தற்போது அதிகாரிகள் குடியிருப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை நாங்களே அகற்றிவிடுகிறோம் என்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், திருவேற்காடு கூவம் ஆற்றங்கரை பகுதியில் உள்ள குடியிருப்புக்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளில் அளவீடு செய்யப்பட்டு குறியீடு இடப்பட்டது. மேலும் அங்கு வசிப்பவர்கள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும், என்றனர்.
The post திருவேற்காடு கூவம் ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்புகளை அகற்ற கணக்கெடுப்பு: கோட்டாட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள் appeared first on Dinakaran.