புழல்: கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பயணிகள் வசதிக்கென செங்குன்றம் பேருந்து நிறுத்தங்களில் தற்காலிக துணி பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். செங்குன்றம் ஜிஎன்டி சாலை மார்க்கெட் பேருந்து நிறுத்தம் மற்றும் செங்குன்றம் பேருந்து நிலையம் அருகில் வெளியூர் செல்லும் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட இரண்டு பக்கங்களிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மழை நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதிகளில் இருந்து பேருந்து நிறுத்த நிழற்குடைகள் அகற்றப்பட்டது. இந்நிலையில், மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி முடிந்த நிலையில், பேருந்து நிறுத்த நிழற்குடைகள் மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால் பேருந்து நிறுத்தத்திற்கு வரும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பெண்கள், முதியவர்கள், உடல்நிலை பாதித்தோர் பரிதவிப்பிற்கு ஆளாகினர். பேருந்திற்காக வெயிலில் நிற்கும் பொதுமக்கள் மயங்கி விழுந்து காயமடைந்தனர்.
இந்நிலையில், மேற்கண்ட பேருந்து நிறுத்தங்களில் தற்காலிக பந்தல்கள் அமைக்கக் கோரி பேரூராட்சி 14வது வார்டு கவுன்சிலர் இலக்கியன், 8வது வார்டு கவுன்சிலர் வினோதினி பாலாஜி ஆகியோர், பேரூராட்சித் தலைவர் தமிழரசி குமார், நிர்வாக செயல் அலுவலர் யமுனா ஆகியோரை கடந்த 2 நாட்களுக்கு சந்தித்து தற்காலிகமாக பந்தல்கள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக பேரூராட்சி தலைவர் மற்றும் நிர்வாக செயல் அலுவலர் ஆகியோர் தெரிவித்தனர். இந்நிலையில், வார்டு கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக செங்குன்றம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வெளியூர் பேருந்து நிறுத்தத்திலும், செங்குன்றம் மார்க்கெட் பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் நேற்று தற்காலிகமாக துணி பந்தல் அமைக்கப்பட்டது. இதனால் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்த பயணிகள் நிழலில் காத்திருந்து பேருந்தில் பயணம் செய்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.
The post கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் செங்குன்றம் பேருந்து நிறுத்தங்களில் தற்காலிக துணி பந்தல்கள் அமைப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.