×
Saravana Stores

வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள கல்லூரியில் கலெக்டர் நேரில் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் பாதுகாப்பு அறையினை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், திருப்போரூர், உத்திரமேரூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 1,932 வாக்குச்சாவடி மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், காஞ்சிபுரம் பொன்னேரி கரை பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா பொறியியல் உறுப்பு கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டன.

பின்னர், சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டிராங்க் ரூமில் வைக்கப்பட்டு, யாரும் உள்ளே நுழையாத வகையில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் மற்றும் தேர்தல் பார்வையாளர் (பொது) பூபேந்திர எஸ்.செளத்திரி, காவல் பார்வையாளர் பரத்ரெட்டி பொம்மா ரெட்டி ஆகியோர் தலைமையில், அனைத்து வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் அறையை பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் தினமும் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி தலைமையில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 10 குழு, ஒரு குழுவில் 6 பேர் என மொத்தம் 60 பேர் 24 மணி நேரமும், 3 ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் காஞ்சிபுரம் போலீஸ் எஸ்பி சண்முகம் தலைமையில், ஒரு நாளைக்கு 1 ஏடிஎஸ்பி, 3 டிஎஸ்பி, 3 இன்ஸ்பெக்டர்கள், 21 எஸ்ஐக்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் 24 பேர், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 45 பேர் என சுழற்சி முறையில், துப்பாக்கிய ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து கடந்த 2 முறை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் கல்லூரி வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில், கலெக்டர் கலைச்செல்வி மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்திற்கு சென்று, வாக்குப்பதிவு இயந்திரங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது திமுக வேட்பாளர் க.செல்வம், வக்கீல் துரைமுருகன், படுநெல்லி பாபு, பாமக வேட்பாளரின் கணவர் வெங்கடேசன், அமமுக நிர்வாகி ரங்கநாதன், அதிமுக சார்பில் வக்கீல் காமேஷ்குமார் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்பு பகுதியை பார்வையிட்டனர்.

The post வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள கல்லூரியில் கலெக்டர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Collector ,Kalachelvi Mohan ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED உத்திரமேரூர் வட்டத்தில் இன்று உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்