- வண்டலூர்
- குடவாஞ்சேரி
- கல்பாக்கம்
- நெடுங்குன்றம்
- கடாங்கொளத்தூர்
- செங்கல்பட்டு மாவட்டம்
- கோலாப்பாக்கம்
- Sadanandapuram
கூடுவாஞ்சேரி: வண்டலூர் அருகே கொளப்பாக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வண்டலூர் அருகே உள்ள நெடுங்குன்றம் ஊராட்சியில், நெடுங்குன்றம், கொளப்பாக்கம், சதானந்தபுரம், ஆலப்பாக்கம், மப்பேடுபுத்தூர், அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஊராட்சிக்கு உட்பட்ட கொளப்பாக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கொளப்பாக்கத்தில் இருந்து நெடுங்குன்றம் நோக்கி செல்லும் சாலை ஓரத்தில் கொளப்பாக்கம் பெரிய ஏரி உள்ளது. அதன் எதிரே 18 ஏக்கர் நிலப்பரப்பில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் கொளப்பாக்கம் பெரிய ஏரியில் இருந்து தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வழியாக 30 ஏக்கர் கொண்ட விவசாய நிலங்களுக்கு மூன்று இடங்களில் பெரிய நீர் வரத்து கால்வாய்கள் உள்ளன. இதனை தனியார் அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்தினர் ஆக்கிரமித்து விட்டனர்.
இதனால் கொளப்பாக்கம் பெரிய ஏரியில் இருந்து மதகிலிருந்து வெளியேறும் உபரி நீர், வரத்து கால்வாய் வழியாக விவசாய நிலங்களுக்கு வரும். ஆனால் இதனை தனியார் அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்தினர் ஆக்கிரமித்து விட்டதால் விவசாய நிலங்களுக்கு ஏரியிலிருந்து வரும் மழைநீர் அடியோடு நின்றுவிட்டது. மேலும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இரவு நேரங்களில் பம்பிங் செய்யப்பட்டு விவசாய நிலத்தில் அத்துமீறி விட்டு வருகின்றனர். இதனால் காலங்காலமாக செய்து வந்த விவசாயத்தை தற்போது செய்ய முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றோம்.
இதில் கழிவுநீரை குடித்த 3 கறவை மாடுகள் ஏற்கனவே இறந்துவிட்டன. மேலும் அங்குள்ள மரங்களும் காய்ந்து கருகிவிட்டன. நிலத்தடி நீரும் அடியோடு கெட்டுப்போய்விட்டன. மேலும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திலேயே மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் குப்பை கழிவுகளை வாரக்கணக்கில் தேக்கி வைப்பதால் கடும் துர்நாற்றமும் வீசி வருகிறது. கொசுக்கடியால் பச்சிளம் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை கடும் அவதிப்பட்டு வருகின்றோம். இதுகுறித்து முதல்வரின் முகவரி, மாவட்ட கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டு கொள்ளவில்லை. எனவே இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என கூறினர்.
The post வண்டலூர் அருகே தனியார் குடியிருப்பு கழிவுநீரால் விவசாயம் பாதிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.