×
Saravana Stores

ஆவடி ரயில் நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்பில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் தீவிரம்: விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர பயணிகள் கோரிக்கை

ஆவடி: ஆவடி ரயில் நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்பில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பணிகளை விரைவில் முடித்து நகரும் படிக்கட்டுகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆவடி ரயில் நிலையம், சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் முக்கியமானது. ஆவடி ரயில் நிலையத்தில், நான்கு நடை மேடைகள் மற்றும் ஆறு இருப்பு பாதைகள் உள்ளன. ஆவடி வழியாக 285 மின்சார ரயில்களும், 5 எக்ஸ்பிரஸ் ரயில்களும் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆவடியில், எச்.வி.எப்., ஓ.சி.எப்., இந்திய விமானப்படை உள்ளிட்ட பல ஒன்றிய நிறுவனங்கள் உள்ளன. இதில், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, வட மாநிலங்கள் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தங்கி பணியாற்றுகின்றனர். அவர்கள் மட்டுமின்றி, சென்னை, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் என தினமும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து ரயில்களில் பயணிக்கின்றனர். இதில் கடந்த 2019ல் ஆவடி ரயில் நிலையத்தில் ‘லிப்ட்’ அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, பாதியிலேயே அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதனால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ரூ.3 கோடி மதிப்பில் புதிதாக நடைமேம்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த நடைமேம்பாலம் மிகவும் உயரமாக உள்ளதால், பயணிகள் பலர் அதில் ஏறி இறங்க விருப்பம் இல்லாமல் தண்டவாளத்தை கடந்து சென்றனர். இதனால் பல விபத்துகள் ஏற்பட்டன. இதில் கடந்த ஆண்டு, அம்பத்தூர் முதல் பட்டாபிராம் வரை ஆவடி ரயில்வே போலீசார் கட்டுப்பாட்டில் இயங்கும் ரயில் நிலையங்களில், தண்டவாளத்தைக் கடந்து சென்று விபத்தில் சிக்கியவர்கள் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை 16 பேர் தண்டவாளத்தை கடந்து இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து ஆவடி ரயில் நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்பில், நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி நடைமேடை 1ல் ஒரு எஸ்கலேட்டரும், நடைமேடை 2 மற்றும் 3க்கு இடையில் ஒரு எஸ்கலேட்டரும், நடைமேடை 4ல் ஒரு எஸ்கலேட்டரும் என மொத்தம் 3 எஸ்கலேட்டர்கள் அமையவுள்ளன. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இதனால், பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். எஸ்கலேட்டர் அமைக்கும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆவடி ரயில் நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்பில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் தீவிரம்: விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Aavadi railway station ,Aavadi ,Avadi Railway Station ,Chennai ,
× RELATED கடந்த 15 வருடங்களாக மூடியே கிடக்கும்...