×

தெளிவு பெறுவோம்

‘கேட்ட மூட்ட செவ்வாய்க்கிழமை’ என்ற சொல்வழக்கின் பொருள் என்ன?
– ஸ்ரீவித்யா, காஞ்சிபுரம்.

கேட்டை நட்சத்திரமும், செவ்வாய்க்கிழமையும் ஒன்றாக இணைந்து வருகின்ற நாள் மிகவும் விசேஷமானது. அன்றைய தினத்தில் செய்யப்படுகின்ற விசேஷ பூஜைகளும், பரிகாரங்களும் உடனடியாக பலனைத் தரக்கூடியவை. இதனை நமக்கு உணர்த்தும் வண்ணம் கேட்டை முட்டும் செவ்வாய்க்கிழமை என்ற பொருளில் வந்த சொற்றொடர் கேட்ட மூட்ட செவ்வாய் என்று மாறி இருக்கிறது.

புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதால் செய்த பாவம் போய்விடுமா?
– திருமலைவாசன், விழுப்புரம்.

அறிவிற்குத் தெரிந்து, வேண்டுமென்றே செய்கின்ற பாவங்கள் நிச்சயமாகப் போகாது. அறிந்தும், அறியாமலும் செய்கின்ற பாவங்கள் மனதை உறுத்துகின்ற காலத்தில், மனம் திருந்திய நிலையில் தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்து அதற்கு பிராயச்சித்தம் தேடுகின்ற நிலையில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதால் செய்த பாவம் தொலையும். எவனொருவன் தான் செய்தது தவறு என்பதை உணர்ந்து, அந்த தவறுக்காக மனதளவில் வருந்துகின்றானோ, அவனுக்கு மட்டுமே புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதால் பாவம்போகும். தனது அடிப்படைக் குணத்தினை மாற்றிக் கொள்ளாது, தொடர்ந்து பாவச் செயலில் ஈடுபடும் ஒருவன் புண்ணிய நதியில் நீராடுவதால் மட்டும் அவனது பாவம் நிச்சயம் போகாது. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

வெள்ளிக்கிழமை மட்டும்தான் பெண்கள் விரதம் மேற்கொள்ள வேண்டுமா?
– மீனாவாசன், சென்னாவரம்.

நிச்சயமாக இல்லை. வெள்ளிக்கிழமை மட்டும்தான் பெண்கள் விரதம் இருக்கவேண்டும் என்று எந்தக் கட்டுப்பாடும் இல்லை. பெண்கள் வெள்ளிக்கிழமை அன்றும், ஆண்கள் சனிக்கிழமை நாளிலும்தான் விரதம் இருக்க வேண்டும் என்று சொல்வதும் அபத்தம். விரதம் இருப்பதற்கு ஆண்பால், பெண்பால் பேதம் எதுவும் கிடையாது. கிருத்திகை, சஷ்டி, ஏகாதசி நாட்களில் இருபாலரும் விரதம் இருப்பதுபோல, எந்த நாளிலும், யார் வேண்டுமானாலும் விரதம் இருக்கலாம், தவறில்லை.

பெண்கள் நாகலிங்கப் பூவினை தலையில் சூடிக் கொள்ளலாமா?
– மல்லிகா அன்பழகன், சென்னை – 78.

கூடாது. நாகலிங்கப் பூவினை பூஜைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக பரமேஸ்வரனை பூஜிப்பதற்கு உகந்த புஷ்பமாக இது கருதப்படுகிறது. மேலும், அதற்கு மிகவும் ஆசார, அனுஷ்டானம் தேவை என்பதால் ஆலயங்களில் நடைபெறும் வழிபாட்டில் மட்டுமே நாகலிங்கப் பூவினை பயன்படுத்துவர். நாகலிங்கப் பூவின் நறுமணம் நாகப் பாம்பினைத் தன்பால் இழுக்கும் தன்மை கொண்டது. விளையாட்டாகவோ அல்லது பரிசோதித்து பார்ப்பதற்காகவோ நாகலிங்கப் பூவினை பெண்கள் தலையில் சூடிக்கொள்வது கூடாது.

இறந்தவர்களை வணங்குவதால் என்ன பலன்?
– சு. பாலசுப்ரமணியன், இராமேஸ்வரம்.

இருப்பவர்களை வணங்குவதைவிட இறந்தவர்களை வணங்குவது என்பது சாலச்சிறந்தது. இருப்பவர்களை என்றால் காசு, பணம் வைத்திருப்பவர்களை என்று பொருள்கொள்ளுங்கள். இருப்பவர்களை வணங்குவதால் கிடைக்கும் பலன் நிலையற்றது. இறந்தவர்களை வணங்குவதால் கிடைக்கும் பலன் நிலையானது. முன்னோர் வழிபாட்டின் மூலமே ஒவ்வொரு குடும்பத்திலும் சுபநிகழ்ச்சி என்பது நடக்கும். வம்சவிருத்தி என்பது இறந்தவர்களை வணங்குவதால் கிடைக்கும் பலன்களில் பிரதானமானது. இந்த முன்னோர் வழிபாடு சரியாக நடக்காத குடும்பங்கள் ராஜவம்சம் ஆயினும் காணாமல் போய்விடும் என்பது கண்கூடு. மாதந்தோறும் வருகின்ற அமாவாசை நாள் இந்து மதத்தவரின் இல்லங்களில் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணமும் இதுவே.

தொகுப்பு: அருள்ஜோதி

The post தெளிவு பெறுவோம் appeared first on Dinakaran.

Tags : Srividya ,Kanchipuram ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...