×
Saravana Stores

நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்

 

திருவள்ளூர், ஏப். 29: திருவள்ளூர் மாவட்டம் வேளாண் துறையின் கீழ் இயங்கி வரும் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மூலம் கிராமங்களுக்கு சென்று விவசாயிகளிடமிருந்து மண் மற்றும் நீர் மாதிரிகளை பெற்று ஆய்வு செய்து மண்வள அட்டை வழங்கி வருகிறது. மண்வள அட்டையில் மண்ணில் கார அமில நிலை, உப்பின் நிலை, மண்ணின் பேரூட்டு சத்துகளான தழை சத்து, மணிச்சத்து,

சம்பல் சத்து மற்றும் நுண்ணூட்ட சத்துக்களான துத்தநாகம், இரும்பு, தாமிரம், மங்கனிஸ், சல்பர் மற்றும் போரான் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு மண்ணில் உள்ள சத்துக்களின் அடிப்படையில் பயிர்களுக்கு உர நிர்வாகம் மேற்கொள்ளவும் நீர் மாதிரியில் கரையும் உப்புகளின் அளவு, கார, அமிலத்தன்மை, நீரின் வகைப்பாடு, நீரின் தன்மைக்கேற்ப சாகுபடி செய்ய வேண்டிய பயிர்கள், பிரச்சனைக்குரிய நீர் மேலாண்மை பற்றி தெரிவிக்கப்படும்.

இன்றளவும் பெரும் பாலான விவசாயிகள் மண்ணில் உள்ள சத்துக்களின் அளவை அறியாமல் அதிக அளவு ரசாயன உரத்தை பயன்படுத்துவதால் மண்ணின் தன்மை பாதிக்கப்படுகிறது. அதிகப்படியான ரசாயன உரங்கள் மழை நீரால் அடித்து செல்லப்படுகிறது. தேவைக்கு அதிகமான பயன்படுத்தப்படாத உரங்கள் மண்ணில் தங்கி மண்ணின் பௌதிக தன்மையை கெடுக்கின்றது. மேலும் ரசாயன உரத்திற்கான செலவும் அதிகரிக்கிறது.

அதிக மகசூல் மற்றும் கூடுதல் லாபம் பெற நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தை விவசாயிகள் அணுகி மண் மற்றும் நீர் பரிசோதனையை தங்களது கிராமங்களிலேயே ஆய்வு செய்து பயனடையலாம். மண்வள அட்டை மூலமாக மண்ணிற்கு தேவையான உர அளவு பரிந்துரை செய்யப்படும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தில் மண் மற்றும் நீர் மாதிரிக்கு ஆய்வு கட்டணமாக ரூ.30 செலுத்தி விவசாயிகள் தங்கள் மண் மாதிரியினை ஆய்வு செய்து, மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ள பரிந்துரையின் மூலமாக நில சீர்திருத்தம், ரசாயனம், இயற்கை மற்றும் உயிர் உரங்களை ஒருங்கிணைந்த முறையில் பயன்படுத்தி அதிக அளவு விளைச்சல் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இத்திட்டத்தில் பயனுடைய விவசாயிகள் தங்களது ஆதார் எண், கைபேசி எண், மண் பரிசோதனை செய்யக்கூடிய நிலத்தின் சர்வே, உட்பிரிவு எண் மற்றும் உர பரிந்துரை தேவைப்படும் பயிர் ஆகிய தகவல்களை அளித்து பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் தங்கள் கிராமத்தில் மண் பரிசோதனை மேற்கொள்ள அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் அல்லது வேளாண் உதவி அலுவலர்களை அணுகவும்.

இதன் தொடக்கமாக வருகின்ற மே மாதம் 3ம் தேதி பூந்தமல்லி வட்டாரத்திற்குட்பட்ட கூடப்பாக்கம் மற்றும் கொரட்டூர் ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெற உள்ளது. இவ்வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து விவசாயிகளும் பயனடையுமாறு திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கா.முருகன் தெரிவித்துள்ளார்.

The post நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை...