ஸ்ரீபெரும்புதூர், ஏப்.29: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (28). தனியார் நிறுவன ஊழியர். கடந்த வாரம் ஸ்ரீபெரும்புதூர் அங்காளம்மன் கோயில் அருகே தனது பைக்கை நிறுத்திவிட்டு லோகேஷ் கடைக்குச் சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பைக் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து லோகேஷ் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் பைக் காணாமல் போன இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில் லோகேஷின் பைக் திருடி சென்றது, சென்னை செம்மஞ்சேரியை சேர்ந்த பிரவீன் ஜோ (23) என தெரியவந்தது. நேற்று முன்தினம் போலீசார் பிரவீனை கைது செய்தனர். விசாரணையில், பிரவீன் ஜோவின் கைகளில் ஊசி செலுத்திய பல தழும்புகள் இருந்தன. அவர் போதை ஊசி செலுத்துவதை ஒப்புக் கொண்டார்.
மேலும் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை ஹைதராபாத் சென்று வாங்கி வந்து தாம்பரத்தைச் சேர்ந்த தமீம் (22), ஸ்ரீபெரும்புதூர், கட்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஈஸ்டர் ராஜ் (23) ஆகியோரிடம் விற்று பணம் சம்பாதித்து வந்ததாக போலீசிடம் தெரிவித்துள்ளார். போதை மாத்திரைகளை பல்வேறு இடங்களில் சப்ளை செய்ய அவ்வப்போது பைக்கினை திருடி அதனை பயன்படுத்தி வந்ததாகவும் கூறியுள்ளார். இதில் தமீம், ஈஸ்டர் ராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து போதை மாத்திரை ஊசி போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
The post ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.