×
Saravana Stores

கொளுத்தும் வெயிலுக்கு மரம் கருகுவதால் வாழை இலைகளின் விலை இரட்டிப்பு: ஆந்திராவிலிருந்து இறக்குமதி

 

திருத்தணி, ஏப். 29: திருமணம் உட்பட வீட்டில் சுப நிகழ்ச்சி என்றால், விருந்தினர்களை உபசரிக்க வாழை இலை சாபாடுக்கு எப்போதும் தனி இடம் உண்டு விருந்து என்றால் அது வாழையிலையில் தான் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பர்த்திருப்போம், விருந்து வைப்பவர்களுக்கும் விருந்து உண்பவர்களுக்கும் வாழை இலை உபசரிப்பு மன மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தும். அதனால் தான் வாழையிலைக்கு எப்போதும் தனி இடம் உண்டு.

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு, அருகே அத்திமாஞ்சேரி, கொத்தகுப்பம், கொடிவலசா, பாதகுப்பம், வடகுப்பம், வனதுர்காபுரம், கர்லம்பாக்கம், கோணசமுத்திரம் உட்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் வாழை தோட்டம் சாகுபடி செய்து வருகின்றனர். வாழை தோட்டங்கள் அதிக அளவில் இருப்பதால், இந்த பகுதியில் வாழைப்பழங்கள் மற்றும் வாழை இலைகள் விலை மற்ற பகுதிகளை விட குறைவாக இருக்கும்.

இதனால் திருமணம், சுப நிகழ்ச்சிகளுக்கு அத்திமாஞ்சேரிப்பேட்டைக்கு வந்து பொதுமக்கள் வாழைப்பழங்கள், வாழை இலைகள் மொத்தமாக வாங்கி செல்வது வழக்கம். இந்த ஆண்டு கோடை வெயில் சுட்டெரித்து வருகின்றது. ஏப்ரல் முதல் வாரத்திலிருந்தே வெயில் சதம் கடத்து 105 டிகிரி கொளுத்தி வருகின்றது. இதனால் வாழை தோட்டங்கள் காய்ந்து, இலைகள் கருகியுள்ளதால், வாழை இலைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வியாபாரிகள் உள்ளூரில் விவசாயிகளிடம் வாழை தோட்டங்கள் மொத்தமாக வாங்கி பக்குவத்திற்கு வந்த வாழைத்தார், வாழை இலைகளை கடைகளில் சில்லரை விற்பனை மற்றும் ஹோட்டல்கள், சுப நிகழ்ச்சிகளுக்கு மொத்தமாக விற்பனை செய்து வந்தனர். இருப்பினும் கோடைக்கு செடிகள் காய்ந்து இலைகள் கருகியதால், ஆந்திர மாநிலம் ஒய்எஸ்ஆர், கடப்பா மாவட்டம், ராஜம்பேட்டா, கோடூர் பகுதிக்கு சென்று வாழை இலைகள் வாங்கி வந்து விற்பனை செய்து வருவதால் விலை இரட்டிப்பு உயர்ந்துள்ளது.

* ரூ.800க்கு விற்ற கட்டு வாழை இலை ரூ.1700க்கு உயர்வு
பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள தோட்டங்களில் வாழை இலை அறுவடை செய்து 250 இலைகள் கொண்ட கட்டு ரூ.800க்கு விற்பனை செய்து வந்த நிலையில் கடும் வெயிலுக்கு இலைகள் வாடியதால், ஆந்திர மாநிலம் ராஜம்பேட்டாவில் வாங்கி வந்து விற்பனை செய்வதால், கட்டு ரூ.1700க்கு விலை அதிகரித்துள்ளது. ரூ.3க்கும் விற்பனை செய்து வந்த தலை வாழையிலை ரூ.5க்கும், ஏடு இலை ரூ.2 லிருந்து ரூ.3க்கும், டிப்பன் இலை 50 பைசாவிலிருந்து ரூ.1க்கு விற்பனை செய்து வருவதாக அத்திமாஞ்சேரிப்பேட்டை சேர்ந்த வாழை மண்டி வியாபாரி ஜெயச்சந்திரன் என்பவர் தெரிவித்தார்.

* சாப்பாடு விலை உயர்வு
பள்ளிப்பட்டு பகுதியிலிருந்து திருத்தணி, அரக்கோணம், சோளிங்கர், காஞ்சிபுரம் பகுதிகளுக்கு வாழை இலை வியாபாரிகள் கட்டு கணக்கில் வாழை இலைகள் பேருந்துகளில் அனுப்பி வந்தனர். தற்போது இந்த பகுதியில் வாழை செடிகள் காய்ந்து இலைகள் கருகியதால், ஆந்திராவிலிருந்து வாங்கி வந்து விற்பனை செய்ய விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருத்தணி போன்ற போன்ற நகரங்களில் தலை வாழை இலை ரூ.10க்கு விற்பனை செய்யப்படுவதால் ஹோட்டல்களில் சாப்பாடு விலை ரூ.10 உயர்த்தியுள்ளனனர்.

The post கொளுத்தும் வெயிலுக்கு மரம் கருகுவதால் வாழை இலைகளின் விலை இரட்டிப்பு: ஆந்திராவிலிருந்து இறக்குமதி appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Thiruthani ,
× RELATED ஆந்திராவுக்கு இருண்டகாலம்: சொல்கிறார் ஜெகன்மோகன்