திருவள்ளூர், ஏப்.27: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நீர்தேக்கங்களில் தேவையான இருப்பு உள்ளதால் சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்களில் பருவமழை தொடங்கி, தொடர்ந்து மழை பெய்ததாலும் வரத்து கால்வாய்கள் மூலம் நீர்த்தேக்கத்திற்கு நீர் கணிசமாக வந்ததாலும், நீர் இருப்பு போதுமானதாக இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தற்போது நீர் இருப்பு 1020 மில்லியன் கன அடி உள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக இணைப்பு கால்வாய் வழியாக 523 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. பேபி கால்வாய் வழியாக 13 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் தற்போது நீர் இருப்பு 130 மில்லியன் கன அடி உள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக 216 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது நீர் இருப்பு 2389 மில்லியன் கன அடி உள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக 114 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
அதேபோல் புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது இருப்பு 2930 மில்லியன் கன அடி உள்ளது. இணைப்பு கால்வாய் வழியாக 595 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக 216 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கண்ணன்கோட்டை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது நீர் இருப்பு 386 மில்லியன் கன அடி உள்ளது.
மொத்தத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவான 11757 மில்லியன் கன அடியில் தற்போது 6855 மில்லியன் கன அடி நீர் இருப்பு
உள்ளது. இதனால் தற்போது கோடை காலத்தில் சென்னை மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க முடியும் என்றும், எந்த பற்றாக்குறையும் ஏற்படாது என்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post அனைத்து நீர்த்தேக்கங்களிலும் இருப்பு கணிசமாக உள்ளது கோடையில் சென்னை மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.