ஈரோடு,ஏப்.26: தகிக்கும் கோடை வெயிலில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க ஈரோடு வஉசி பூங்காவில் பறவைகளுக்கு பானைகளில் தண்ணீர் வைத்து மாநகராட்சி நிர்வாகம் பாதுகாத்து வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. நாட்டிலேயே அதிகபட்ச வெயில் அளவில் ஈரோடு 2வது இடத்தில் உள்ளது.
வெயில் தாக்கம் மனிதர்களை மட்டுமல்லாது விலங்குகள்,பறவைகள் என அனைத்து உயிரினங்களையும் பாதித்து வருகின்றது. இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட வஉசி பூங்காவில், பல்வேறு வகையான பறவைகள்,வவ்வால் போன்றவை ஏராளமாக உள்ளன.தற்போது கோடை காலம் என்பதால் பூங்காவில் உள்ள குட்டைகளிலும்,தொட்டிகளிலும் நீரின்றி வறண்டு காணப்படுகின்றன.
எனவே பறவைகளின் தாகத்தை தணிக்கும் வகையில், ஈரோடு மாநகராட்சி நிர்வாகமானது பூங்காவில் பறவைகளுக்கு பானைகள்,டப்பாக்களில் ஆங்காங்கே குடிநீர் வைத்து பாதுகாத்து வருகின்றது. தினமும் இரண்டு வேளை பானைகள், டப்பாக்களை சுத்தம் செய்து, அதில் தண்ணீர் நிரப்பி வருகின்றனர். கோடைகாலம் முடியும் வரை இது தொடரும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்
The post தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு தண்ணீர் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி appeared first on Dinakaran.