திருத்தணி,ஏப்.26 : திருத்தணி அருகே தொழிற்சாலை பேருந்தில் சீட் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் 17 வயது சிறுவன் கிரிக்கெட் பேட், பட்டா கத்தியால் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திருத்தணி அருகே செருக்கனூர் காலனியைச் சேர்ந்தவர் விமல்ராஜ், கோரமலங்கலம் காலனியைச் சேர்ந்தவர் குமார் (21). இவர்கள் இருவரும் பெரும்பதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்பு வேலைக்குச் செல்லும் பேருந்தில் ஜன்னல் ஓர சீட் பிடிப்பதில் இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து குமார் தனது நண்பரான 17 வயது சிறுவனிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து விமல்ராஜுக்கு போன் செய்து சிறுவன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான். மேலும் நேரடியாகச் சென்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த விமல்ராஜ் தரப்பினர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கே.ஜி.கண்டிகைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்த குமாரின் நண்பரான சிறுவனை மடக்கிப் பிடித்தனர். பின்னர், அவரை கடத்திச் சென்று செருக்குனூர் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து காமராஜ் என்பவரின் மகன் விமல்ராஜ் (22), மாதவன் என்பவரின் மகன் தமிழ்ச் செல்வன் (21), ஏழுமலை என்பவரின் மகன் சாரதி (21), மோகன் என்பவரின் மகன் சூர்யா (22) மற்றும் மகன் சுகன்ராஜ் (21) ஆகிய 5 பேரும் சேர்ந்து தாங்கள் வைத்திருந்த கிரிக்கெட் பேட், ஸ்டெம்ப் மற்றும் பட்டா கத்தி ஆகியவற்றால் சிறுவனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருத்தணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தலை, கை, கால், இடுப்பு மற்றும் முதுகுப் பகுதி என உடம்பின் பல்வேறு பகுதிகளில் பலத்த காயமடைந்த சிறுவன் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறான். இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் அக்கா யமுனா கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த திருத்தணி உதவி காவல் ஆய்வாளர் ராக்கி குமாரி உள்ளிட்ட போலீசார், வாலிபர்கள் 5 பேரையும் நேற்று கைது செய்து திருத்தணியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post பேருந்தில் சீட் பிடிப்பதில் தகராறு கிரிக்கெட் பேட், கத்தியால் சிறுவன் மீது சரமாரி தாக்குதல்: 5 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.