புதுடெல்லி: நாட்டில் உள்ள 70 கோடி இந்தியர்களை விட 21 கோடீஸ்வரர்களிடம் அதிக சொத்து இருப்பது குறித்து பிரதமர் மோடி பேச மாட்டார் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்து உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி,‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களின் சொத்துக்களை ஊடுருவல் காரர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும் மறுபங்கீடு செய்வார்கள்.
நாட்டின் வளங்கள் மீதான முதல் உரிமை சிறுபான்மை சமூகத்தினருக்குத்தான் சொந்தம் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பேசியுள்ளார்’ என்று தெரிவித்தார். இந்த கருத்து சர்ச்சையானது. இதையடுத்து மோடியின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் நாட்டில் 70 கோடி இந்தியர்களை விட 21 கோடீஸ்வரர்களிடம் அதிக சொத்து குவிந்துள்ளதாகவும், 2012 முதல் 2021 வரை உருவாக்கப்பட்ட நாட்டின் சொத்தில் 40 சதவீதம் 1 சதவீதம் பேரிடம் ஒதுங்கியிருப்பதாகவும் காங்கிரஸ் தெரிவித்து உள்ளது. இதுபற்றி காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடி இதை எல்லாம் உங்களிடம் ஒருபோதும் சொல்லமாட்டார்:
* 2012 முதல் 2021 வரை நாட்டில் உருவாக்கப்பட்ட செல்வத்தில் 40% க்கும் அதிகமானவை மக்கள் தொகையில் 1% பேரிடம் குவிந்துள்ளது.
* நாட்டின் மொத்த சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) தோராயமாக 64% ஏழைகள், கீழ் நடுத்தர வகுப்பினர் மற்றும் நடுத்தர வகுப்பினரிடமிருந்து வருகிறது.
* கடந்த பத்து ஆண்டுகளில் விற்கப்பட்ட பொதுச் சொத்துக்கள் மற்றும் வளங்களில் பெரும்பாலானவை ஒன்று அல்லது இரண்டு நிறுவனங்களுக்குச் சென்றுள்ளன. பொருளாதாரத்தின் வளர்ந்து வரும் ஏகபோகமானது அதிக பணவீக்கத்திற்கு வழிவகுத்தது என்று பொருளாதார வல்லுநர்கள் காட்டியுள்ளனர்.
* இன்று 21 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 70 கோடி இந்தியர்களை விட அதிகமாக உள்ளது. எனவே இந்தியாவுக்கு வேகமான பொருளாதார வளர்ச்சி தேவை. இந்தியாவிற்கு மிகவும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி தேவை. இந்தியாவிற்கு மிகவும் சுற்றுச்சூழல் ரீதியாக நிலையான வளர்ச்சி தேவை. இந்தியா கூட்டணி அரசால் மட்டுமே இதையெல்லாம் வழங்க முடியும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post இதை எல்லாம் மோடி பேச மாட்டார் 70 கோடி இந்தியர்களை விட 21 பேரிடம் அதிக சொத்து: காங்கிரஸ் விளாசல் appeared first on Dinakaran.