×
Saravana Stores

மதுரவாயலில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பூந்தமல்லி, ஏப். 23: மதுரவாயல் மார்க்கெட் பகுதியில் சாலையோரம் சிறிய அளவில் நாகாத்தம்மன் கோயில் கட்டப்பட்டிருந்தது. இந்த கோயில் தனது வீட்டின் முன்பு ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு இருப்பதாக சாந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு கோயிலை இடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். எனவே, உத்தரவின் படி சில நாட்களுக்கு முன்னர் கோயில் ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் வந்திருந்தனர்.

அப்போது கோயிலை இடிக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கோயிலை இடிக்காமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர். மேலும் அங்கு திரண்டு போராடிய பக்தர்கள் கோயிலை இடிக்க வழக்கு தொடர்ந்த சாந்தி என்பவரது வீடும் நான்கு அடி ஆக்கிரமிப்பில் உள்ளதால் அதையும் இடிக்க வேண்டும் என குற்றம்சாட்டி இருந்தனர். இந்நிலையில், நேற்று ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கவும் கோயிலை இடிக்கவும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் வந்த அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த கோயிலை இடித்ததுடன் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்பட்ட வீட்டின் முன் பகுதியையும் பொக்லைன் இயந்திரம் கொண்டு இடித்து அகற்றினர். இதற்கிடையே கோயிலை இடிக்கும்போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அப்போது சில பெண்கள் பக்தி பரவசத்துடன் சாமி வந்து ஆடினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

The post மதுரவாயலில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Maduravayal ,Poontamalli ,Nagathamman Temple ,Shanti ,Madras High Court ,Dinakaran ,
× RELATED லாரி மீது ஆட்டோ மோதி பாட்டி, பேத்தி பரிதாப பலி