×

முல்லைப் பெரியாறில் வாகன நிறுத்துமிடம் நில அளவைத்துறையின் ஆய்வறிக்கையை ஏற்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம்

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்துமிடம் கட்டும் பகுதி குத்தகை எல்லைக்குள் இல்லை என்ற இந்திய நில அளவைத்துறையின் ஆய்வறிக்கையை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணைக்கட்டு பகுதியில் சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்தம் கட்டுவதற்காக கேரள அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், கேரள அரசு வாகன நிறுத்தம் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கியது.

இதையடுத்து மேற்கண்ட தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் கேரள அரசு தன்னிட்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள்,’மேற்பார்வை குழுவின் முன்னிலையில் இரு மாநில அரசும் ஒருமித்த கூட்டு நில ஆய்வை நடத்த வேண்டும். இதனை மூன்று மாதத்தில் முடிக்க வேண்டும் என்று முன்னதாக உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய்.எஸ். ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் உமாபதி மற்றும் குமணன்,‘‘முல்லைப் பெரியாறு நீர் பிடிப்பு மற்றும் நீர் பரவல் பகுதியின் எல்லைகள் பெரியார் – குமுளி கிராமத்தில் உள்ளது. இதனை நில அளவைத் துறையால் கடந்த 1924ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வரைபடத்தை ஆய்வுக்குழு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. மேலும் அணை பகுதியில் மெகா வாகன நிறுத்துமிடம் கட்டும் இடத்தின் மூலப்பகுதி, தரை தளம் எங்குள்ளது என்பதை ஆய்வு செய்யவும் அளவைத்துறை தரப்பு தவறிவிட்டது. எல்லையை நிர்ணயம் செய்யும் போது தமிழ்நாட்டின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. இந்திய நில அளவைத்துறை இந்த ஆய்வை தனிப்பட்ட முறையில் நடத்தியுள்ளது.

மேலும் அந்த விவரங்களை தமிழ்நாடு அரசுக்கு கூட தரவில்லை. முல்லைப் பெரியாறில் அணை பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்துமிடம் கட்டும் பகுதி குத்தகை பகுதிக்குள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் ஒருதலை பட்சமாக செயல்பட்டுள்ள இந்திய நில அளவைத்துறையின் ஆய்வறிக்கையை தமிழ்நாடு அரசால் ஏற்க முடியாது. இதுகுறித்த விரிவான பதில் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். இதையடுத்து தமிழ்நாடு அரசின் வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கேரளா அரசு வாகன நிறுத்துமிடம் கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு, கேரளா அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூலை.10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

The post முல்லைப் பெரியாறில் வாகன நிறுத்துமிடம் நில அளவைத்துறையின் ஆய்வறிக்கையை ஏற்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Mullaperiyar ,Tamil Nadu government ,Supreme Court ,New Delhi ,Land Survey Department of India ,Kerala government ,Mullai Periyar dam ,Mullaip… ,Mullaip Periyar ,Dinakaran ,
× RELATED வெளிமாநில பதிவெண் ஆம்னி பேருந்துகளை...