திருமலை: மசூதி மீது அம்பு விடுவது போன்ற சைகை காண்பித்த ஐதராபாத் பாஜக பெண் வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பாஜக வேட்பாளரை கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்த பெண் எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தெலங்கானா மாநிலத்தில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 13ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் ஐதராபாத் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் மாதவி லதா கடந்த 17ம் தேதி ஸ்ரீராம நவமி யாத்திரையில் பங்கேற்றார். அப்போது ஆம்பர் பஜார் சந்திப்பில் உள்ள மசூதியை நோக்கி அம்பு ஏய்தது போன்று சைகை செய்ததாக வீடியோ வைரலானது.
இந்த வீடியோ காட்சிகளை வைத்து இம்ரான் என்பவர் அளித்த புகார் மீது போலீசார் அவர் மீது மத உணர்வுகளை புண்படுத்தியதாக பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து ஐதராபாத் பாஜக எம்பி வேட்பாளர் மாதவி லதா சைதாபாத் பகுதியில் பாஜவினருடன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சைதாபாத் காவல் நிலைய பெண் எஸ்.ஐ. உமாதேவி பாஜக வேட்பாளர் மாதவி லதாவிற்கு கை குலுக்கி கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ வைரலான நிலையில் ஐதராபாத் நகர காவல் ஆணையர் சீனிவாசா எஸ்ஐ. உமாதேவியை நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
The post மசூதி மீது அம்பு விடுவது போன்ற சைகை காண்பித்த ஐதராபாத் பாஜ பெண் வேட்பாளர் மீது வழக்கு: கட்டித்தழுவி வாழ்த்திய பெண் எஸ்ஐ சஸ்பெண்ட் appeared first on Dinakaran.