×

சைகை மூலம் அம்பு விட்ட விவகாரம்: பாஜக பெண் வேட்பாளர் மீது வழக்கு; ஐதராபாத் போலீஸ் நடவடிக்கை

ஐதராபாத்: சைகை மூலம் அம்பு விட்ட விவகாரம் தொடர்பாக பாஜக பெண் வேட்பாளர் மீது ஐதராபாத் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மக்களவை தொகுதியில் ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவரான எம்பி அசாதுதீன் ஒவைசி போட்டியிடுகிறார். கடந்த 40 ஆண்டுகளாக ஒவைசியின் குடும்பமே இந்த தொகுதியில் வெற்றி பெற்று வருகிறது.

இந்த முறை ஒவைசியை எதிர்த்து மாதவி லதா என்பவர் பாஜக சார்பில் களமிறங்கி உள்ளார். பரதநாட்டிய கலைஞரான இவர், இந்து மத சொற்பொழிவாளராகவும் உள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஐதராபாத் சித்தியாம்பர் பஜார் அருகே நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தில் மாதவி லதா கலந்து கொண்டார். அப்போது, அங்குள்ள மசூதியை நோக்கி அம்பு விடுவது போல, மாதவி லதா பாவனை செய்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. மாதவி லதாவின் செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாதவி லதா மீது கொடுத்த புகாரின் அடிப்படையில், அவர் மீது மத உணர்வுகளை சைகை மூலம் புண்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் ஐதராபாத் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 295-ஏ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது’ என்று கூறினர். இதற்கிடையே மாதவி லதா வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், ‘சமீபத்தில் வெளியான வீடியோ முழுமையாக இல்லை. இந்த வீடியோவால் யாருடைய உணர்வுகளாவது புண்பட்டிருந்தால், அதற்காக மன்னிப்பு கோருகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

The post சைகை மூலம் அம்பு விட்ட விவகாரம்: பாஜக பெண் வேட்பாளர் மீது வழக்கு; ஐதராபாத் போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : BJP ,Hyderabad ,AIMIM ,Asaduddin Owaisi ,Lok Sabha ,Telangana ,Dinakaran ,
× RELATED மசூதி மீது அம்பு விடுவது போன்ற சைகை...