×

கணவர்கள் சிறையில் இருக்கும் நிலையில் தேசிய அரசியலில் கவனத்தை ஈர்த்த இருவரின் மனைவிகள்: கெஜ்ரிவால், ஹேமந்த்துக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தனர்

ராஞ்சி: கெஜ்ரிவால், ஹேமந்த் ஆகியோர் சிறையில் இருக்கும் நிலையில், அவர்களது இரு மனைவிகளும் தேசிய அரசியலில் நுழைந்து அரசியல் கவனம் பெற்றுள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் கடந்த சில வாரங்களுக்கு முன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர். இருவரும் கைது செய்யப்பட்ட அடுத்த சில நாட்களில் இருவரின் மனைவிகளும் அரசியல் களத்தில் அறிமுகமாகினர்.

நாடாளுமன்ற தேர்தல் காலம் என்பதால், இருவரின் மனைவிகள் அரசியல் களத்தில் இறங்கியிருப்பது தேசிய அரசியலில் புதிய அடையாளமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த ‘இந்தியா’ கூட்டணி தலைவர்களின் கூட்டத்தில் கெஜரிவாலின் மனைவி சுனிதா, ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிறையில் இருக்கும் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் ஆகியோருக்காக இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அந்த இருக்கைகளில் அவர்களது மனைவிகள் அமர்ந்திருந்தனர். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட 28 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய சுனிதா, ‘எனது கணவரை (கெஜ்ரிவால்) கொல்ல திட்டமிட்டுள்ளனர். அவருக்கு இன்சுலின் ஊசி மறுக்கப்பட்டது. அவருக்கு தினமும் 50 யூனிட் இன்சுலின் தேவைப்படுகிறது. சர்வாதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தில் அவர் நிச்சயம் வெற்றி பெறுவர். சிறையில் இருந்து கெஜ்ரிவாலும், ஹேமந்த் சோரனும் வெளியே வருவார்கள்’ என்றார்.

The post கணவர்கள் சிறையில் இருக்கும் நிலையில் தேசிய அரசியலில் கவனத்தை ஈர்த்த இருவரின் மனைவிகள்: கெஜ்ரிவால், ஹேமந்த்துக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தனர் appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,Hemant ,Ranchi ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Jharkhand ,Hemant Soran ,
× RELATED அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில்...