காந்திநகர்: குஜராத்தில் பிரசாரத்துக்கு வந்த பாஜ எம்எல்ஏ மீது ராஜ்புத் சமூகத்தினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத்தின் ராஜ்கோட் தொகுதியில் ஒன்றிய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா பாஜ வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் ராஜ்புத்திர சமூகத்தினர் ஆங்கிலேயர்களோடு வர்த்தக உறவு வைத்ததோடு, பெண் கொடுக்கவும் செய்தார்கள் என்று இழிவுப்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இதற்கு ராஜ்புத் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ரூபாலாவுக்கு பதிலாக வேறு வேட்பாளரை பாஜ அறிவிக்க வேண்டும் என்று தொடர் போராட்டங்கள் நடத்தினர். ஆனால், அதை பாஜ தலைமை கண்டுகொள்ளவில்லை. வேட்பாளரை மாற்ற பாஜ மறுத்துவிட்டது.
இதனால், குஜராத் மட்டுமல்லாமல் பல்வேறு வட மாநிலங்களிலும் பாஜவுக்கு எதிராக ராஜ்புத் இனத்தினர் அணி திரண்டுள்ளனர். பாஜவுக்கு எதிராக வாக்களிப்பது என்று ராஜ்புத் சமூகத்தினர் முடிவு செய்துள்ளனர். ராஜ்புத் சமூகத்தினரின் எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிரச்சாரத்திற்கு வந்த பாஜ எம்.எல்.ஏ.-வை அவர்கள் முற்றுகையிட்டனர்.குஜராத்தின் சபர்கந்தா பகுதியில் பிரச்சாரத்திற்கு நேற்று வந்த பாஜ எம்.எல்.ஏ ரமண்லால் ஓராவை ராஜ்புத் சமூகத்தினர் முற்றுகையிட்டனர். அப்போது ராஜ்புத் சமூகத்தினருக்கும் எம்எல்ஏவுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post குஜராத்தில் பாஜவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது பிரசாரத்துக்கு வந்த பாஜ எம்.எல்.ஏ. மீது ராஜ்புத் சமூகத்தினர் தாக்குதல் appeared first on Dinakaran.