செங்கல்பட்டு, ஏப். 21: திருப்போரூர் அருகே தேர்தல் அலுவலரின் அலட்சிய போக்கால் 500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். அப்போது அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுக்காவிற்கு உட்பட்ட பெருந்தண்டலம் ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் பெருந்தண்டலம், வளர்குன்றம், ஓவர்டன்பேட்டை,அந்திரேயபுரம், ரெட்டிகுப்பம், கருப்பேரி உள்ளிட்ட கிராம மக்கள் வாக்களிக்க 105 மற்றும் 106 ஆகிய பதிவெண்கள் கொண்ட வாக்குpபதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இதில் 105ல் 1,114 வாக்காளர்களும், 106ல் 1,104 வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும். காலையில் வாக்களிக்க வந்த மக்கள், பிறகு வாக்களித்துக் கொள்ளலாம் என திரும்பிச் சென்று விட்டனர். இந்த வாக்குச்சாவடியில் காலை 8.30 மணிக்குத்தான் வாக்குப்பதிவு தொடங்கியது. எந்திரக்கோளாறு காரணமாகவும், கடும் வெயில் காரணமாகவும் மாலையில் வந்து வாக்கு மையத்தில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.
காலை முதல் மாலை வரை சொற்ப அளவில் வாக்குபதிவு நடைபெற்ற நிலையில், மாலை நேரத்தில் வாக்குப்பதிவு சூடுபிடிக்கத் தொடங்கியது. மாலை 5 மணிக்கெல்லாம் டோக்கன் பெற்றவர்கள் மட்டும் உள்ளே இருங்கள். டோக்கன் பெறாதவர்களும் வாக்களிக்க அனுமதிக்கப்படும். வெளியே காத்திருங்கள் என தேர்தல் அலுவலர் கூறியதால் 500க்கும் மேற்ப்பட்டோர் வெளியே காத்திருந்தனர். ஆனால் டோக்கன் வாங்கியவர்கள் வாக்களித்து முடிந்ததும் கேட்டை மூடிவிட்டு, நேரம் கடந்துவிட்டது.
இனி வாக்களிக்க முடியாது என கூறியுள்ளார். 1 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த மக்கள், இதை முன்கூட்டியே சொல்லியிருக்க வேண்டியதுதானே. மணிக்கணக்கில் எங்களை காக்க வைத்துவிட்டு வாக்களிக்க முடியாது என சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என தேர்தல் அலுவலர் மற்றும் காவல்துறையினருடன் இரவு 7 மணிவரை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.
The post தேர்தல் அலுவலரின் அலட்சிய போக்கால் ஓட்டு போடாமல் திரும்பிய 500 வாக்காளர்கள்: வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.