- கன்னியாகுமாரி
- மக்களவை
- நாகர்கோவில்
- லோக்
- சபா
- பொது தேர்தல்
- விளவங்கோடு சட்டமன்றம்
- லோக் சபா ஊராட்சி
- தின மலர்
*வாக்குப்பதிவு அரைமணி நேரம் வரை தாமதம்
நாகர்கோவில் : கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் 26க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்குவதில் அரை மணி நேரத்திற்கும் மேல் தாமதம் ஏற்பட்டது. கன்னியாகுமரி மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
இதில் நாகர்கோவில் எஸ்எல்பி அரசு மகளிர் பள்ளி வாக்குச்சாவடி எண் 173ல் மின்னணு இயந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதம் ஆனது. மின்னணு இயந்திரம் சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்தது. மேலும் குன்னங்காடு, மணக்குடி, திருவட்டார், இலந்தையடி, பேச்சிப்பாறை, பூதப்பாண்டி, வெள்ளிச்சந்தை ஆகிய இடங்களில் உள்ள வாக்குசாவடிகள் உட்பட 26 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.
பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டை உட்பட 13 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பலர் பூத் சிலிப் மட்டுமே எடுத்து வந்திருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று மீண்டும் ஆவணங்களை எடுத்து வந்து வாக்களித்தனர். அதனை போன்று கடந்த முறை சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் வாக்களித்த பலருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டிருந்தது. இதனால் அவர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று ஏமாற்றம் அடைந்தனர்.
குமரி மாவட்டத்தில் மொத்தம் 1698 வாக்குச்சாவடிகளில் வாக்குபதிவு நடந்தது. இந்த வாக்குச்சாவடிகளில் மொத்தம் 8152 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஒன்றிய அரசின் பணியாளர்கள், ஊர்காவல் படையினர் உள்ளிட்டோர் வாக்குசாவடிகளில் வாக்காளர்களுக்கு உதவும் பணிகளில் ஈடுபட்டனர். நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களுக்கும் தகவல்கள், கோரிக்கைகள், புகார்கள் கையாள அவர்களுக்கு தனியே பயிற்சி அளிக்கப்பட்டு காலை முதல் புகார்கள் பெறுதல் நடந்த வருகிறது. குமரி மாவட்ட கலெக்டர் தர் நேற்று காலையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார். புகார்களுக்கு இடமளிக்காத வகையில் பணிகளை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார்.
மொத்தம் உள்ள 1698 வாக்குசாவடிகளில் 1104 வாக்குச்சாவடிகளில் வெப் காஸ்டிங் சிசிடிவி மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு கண்காணிப்பு நடைபெற்றது. இதன் மூலம் அலுவலர்கள் கலெக்டர் அலுவலகத்தில் இருந்தவாறே வாக்குச்சாவடி நடவடிக்கைகளை நேரடியாக கண்காணித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு 640 இடங்களில் ஒரு உதவியாளர், ஒரு வீல் சேர் வசதி செய்யப்பட்டு முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீல் செயர்களில் வாக்குச்சாவடி வரை அழைத்து செல்லப்பட்டனர்.
இதற்கு தனியே பணியாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.85 வயதுக்கும் மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக சென்று வாக்குப்பதிவு செய்யும் வகையில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவ்வாறு தபால் வாக்குப்பதிவு செய்ய விரும்பாதவர்கள் நேற்று வாக்குச்சாவடிகளில் நேரடியாக வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். அவர்களை வீல் செயர்களில் அங்கு நியமிக்கப்பட்டிருந்த பணியாளர்கள் அழைத்து சென்று உதவினர்.
மாதிரி வாக்குச்சாவடிகள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடிக்கும் ஒன்று வீதம் 6 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனை போன்று பெண்களுக்கான பிரத்யேக பிங்க் வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தது. குமரி மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் 199 கண்டறியப்பட்டிருந்தது. இவற்றில் ஒரு மைக்ரோ அப்சர்வர், உள்ளூர் போலீசார் மற்றும் மத்திய படை அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிசிடிவி மூலமும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ஒரு பட்டனை அழுத்தினால் 3 விளக்குகள் எரிந்தன
நித்திரவிளை: நித்திரவிளை அருகே தூத்தூர் மீனவ கிராம மக்கள் வாக்களிக்க பயஸ் லெவன்ந் மேல்நிலைப் பள்ளியில் வாக்கு சாவடி எண் 63 அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்கு சாவடியில் 976 வாக்குகள் உள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 112 ஓட்டுகள் பதிவான நிலையில் சுமார் 8.30 மணியளவில் ஒரு பட்டனை அழுத்தினால் வேட்பாளர் வரிசையில் 3 பகுதியில் விளக்கு எரிந்தது.
இது தொடர்பாக வாக்காளர் புகார் கூறியதை தொடர்ந்து வாக்குப்பதிவு உடனடியாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வாக்குச் சாவடி பொறுப்பாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர் தலைமையில் மென் பொறியாளர்கள் வந்து பழுதடைந்த மெஷினை சரி செய்து பார்த்தனர். இருப்பினும் சரியாக வில்லை.
அதைத்தொடர்ந்து மாற்று மெஷின் பொருத்தி வாக்குப்பதிவு 10.20 க்கு மீண்டும் தொடங்கியது. இந்த பூத்தில் வாக்கு பதிவு தடைபட்ட சுமார் ஒருமணி 50 நிமிட கால அளவை, வாக்கு பதிவிற்காக மாலை 6 மணிக்கு மேல் நீட்டி கொடுப்பதாக கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர் உறுதியளித்து சென்றார்.
இது போல் சூரியகோடு தனியார் மேல்நிலைப் பள்ளியில் பூத் எண் 92, காலை 7 மணிக்கு பழுதாக காணப்பட்டது. உடனே சரி செய்து வாக்குப்பதிவு தொடங்கியது. தொடர்ந்து 10 மணியளவில் ஸ்க்ரீன் பேட் பழுதானது. மாற்று ஸ்க்ரீன் பேட் பொருத்தப்பட்டு வாக்கு பதிவு தொடங்கியது.வள்ளவிளை மீனவ கிராமத்தில் பூத் எண் 9ல் காலை 7 மணி முதல் மெஷின் பழுதாக காணப்பட்டது. இதனால் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து மெஷினை சரி செய்ய முடியாத காரணத்தால் மாற்று மெஷின் பொருத்தி ஒரு மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக 8.20 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது.
வாக்காளர்கள் அவதி
குலசேகரம் : காட்டாத்துறை அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 153வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது ஏற்பட்டது. தேர்தல் பணியாளர்கள் பழுதை சரி செய்த பிறகு ஒரு மணிநேரம் கழித்து வாக்குப்பதிவு தொடங்கியது. இதேபோல் திருவட்டார் அரசு பள்ளியில் 73வது வாக்குச்சாவடி மற்றும் பேச்சிப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி 5வது வாக்குச்சவடி, பொன்மனை பேரூராட்சி அலுவலகத்தில் 44வது வாக்குசாவடி மற்றும் செருப்பாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி 55வது வாக்குசாவடியில் இயந்திரம் பழுதானதால் அரைமணிநேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.
அண்டூர் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி 84வது வாக்குச்சாவடியில் ஒருமணிநேரம் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. இதேபோல் உண்ணியூர்கோணம் அரசு தொடக்கப்பள்ளியில் 18வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கி 6 வாக்குகள் பதிவான நிலையில் பழுது ஏற்பட்டது.
பின்னர் தேர்தல் பணியாளர்கள் பழுதை சரி செய்த நிலையில் மீண்டும் வாக்குப்பதிவு நடந்தது. ஆனால் மறுபடியும் அந்த இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் வேறொரு புதிய வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது. இதனால் அங்கு 2 மணி நேரம் தாமதமாக காலை 9 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்களிக்க நீண்டநேரம் காத்திருந்த நிலையில் திடீரென இயந்திரம் பழுதானதால் வாக்காளர்கள் பலரும் எரிச்சலடைந்தனர்.
The post கன்னியாகுமரி மக்களவை தேர்தல் 26 இடங்களில் மின்னணு இயந்திரங்கள் கோளாறு appeared first on Dinakaran.