பரூச்: 400 தொகுதி என்பது பா.ஜவின் பொய் கோஷம். நாங்கள் இங்கு சர்வே நடத்த வரவில்லை. அடுத்து மத்தியில் எங்கள் ஆட்சிதான் என்று குஜராத்தில் பிரசாரம் செய்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார். குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கும் 3 கட்டமாக மே 7ம் தேதி தேர்தல் நடக்கிறது. இங்கு இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் 24 தொகுதிகளிலும், ஆம்ஆத்மி 2 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
இந்தியா கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய குஜராத் மாநிலம் பரூச் பகுதிக்கு சென்ற பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசியதாவது: நாங்கள் இங்கு கணக்கெடுப்பு நடத்த வரவில்லை. மத்தியில் நாங்கள் தான் நேரடியாக ஆட்சி அமைப்போம். டெல்லி அல்லது பஞ்சாபில் எங்கள் வெற்றியை யாரும் கணிக்கவில்லை. குஜராத்தில் எங்கள் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் வெற்றி பெறுவார்கள் என்றோ, சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும் என்றோ யாரும் கணிக்கவில்லை.
அதே போல் தான் இந்த முறை மக்களவை தேர்தல் முடிவுகளைப் பார்த்த பிறகு அவர்கள் ஆச்சரியப்படுவார்கள். கெஜ்ரிவால் தான் உத்தரவாதம் அளித்தார். இப்போது பாஜ பயத்தின் காரணமாக, தங்கள் தேர்தல் அறிக்கையில் உத்தரவாதங்கள் பற்றி பேசத் தொடங்கியுள்ளது. அவர்கள் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று கூறுவது எல்லாமே பொய்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின் போது அவர்கள் (பாஜ) ஏன் இதைச் சொல்லவில்லை? எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்பதை முடிவு செய்ய அவர்கள் யார்? 140 கோடி இந்திய மக்கள்தான் யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதை முடிவு செய்வார்கள். மக்களவை தேர்தல் நேரத்தில் கெஜ்ரிவாலை சிறையில் அடைத்திருப்பது எதேச்சதிகாரத்தையும், ஆளுங்கட்சியின் சதியையும் காட்டுகிறது. இவ்வாறு பேசினார்.
The post 400 தொகுதி என்பது பொய் கோஷம் அடுத்து எங்க ஆட்சிதான்: குஜராத்தில் பகவந்த் மான் அதிரடி appeared first on Dinakaran.