சோழிங்கநல்லூர், ஏப்.18: திராவிட மாடல் ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் சமூகநீதி திட்டங்களில் ஒரு மாபெரும் முன்னோடி திட்டம் என திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து திமுக வெளியிடட்டுள்ள அறிக்கை: “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்குமாம்” எனும் முண்டாசு கவிஞன் மகாகவி பாரதியார் முரசொலித்ததற்கேற்ப, தமிழ்நாட்டில் பெண்களின் நலன்களை பேணுவதிலும் சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும், கல்வி உள்ளிட்ட பல நிலைகளிலும் மேம்பட திமுக சார்பில் கலைஞரால் எண்ணற்ற பல திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சி அமைப்பிலும் இட ஒதுக்கீடு, பெண்களுக்கு சொத்துரிமை உள்ளிட்ட பல திட்டங்கள் இன்றளவும் பெண்களுக்கு பெருமையையும், அங்கீகாரத்தையும் தந்துள்ளது என்றால் அது மிகையல்ல. அதன்படி, அவரது வழியில் அயராத உழைப்பில் தற்போது ஆட்சி பொறுப்பில் அமர்ந்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியாவிற்கே வழிகாட்டுகின்ற வழியில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
குறிப்பாக, பெண்கள் நலனில் எந்நாளும் அக்கறை கொண்டுள்ள இந்த அரசினால் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்புமிக்க திட்டங்களான அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் செய்யும் விடியல் பயண திட்டம், பள்ளி மாணவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கிடும் புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் ஆகிய திட்டங்களின் வரிசைகளில், சமுதாயத்தில் வெற்றிபெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்கும் பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என்கின்ற நிலையினை மாற்றியமைக்கின்ற வகையில் ஒரு தாயாக, சகோதரியாக, மனைவியாக பல அவதாரங்களில் பல மணி நேரம் தன் அளப்பரிய உழைப்பை வழங்கி குடும்பத்தையும் நாட்டினையும் முன்னேற்றிட அரும்பாடுபட்டு வருகின்றார்களே அத்தகைய மகளிரின் மாண்பை போற்றி, அங்கீகரிக்கின்ற வகையில் சமுதாயத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ள மாபெரும் திட்டமே “கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்”.
இத்திட்டம் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023ல் சட்டமன்றத்தில் ஆற்றிய உரையில், “சுயமரியாதைக் கொள்கையில் பெரியார், இனமான எழுச்சியில் அண்ணா, நவீன தமிழகத்தைக் கட்டமைப்பதில் கலைஞர் ஆகியோர் வருத்தளிந்த தமிழ்நாட்டை வளமான வலிமையான மாநிலமாக உருவாக்கி அனைத்துத் துறைகளிலும் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்திட செய்திடும் வகையில் சமூகம், அரசியல், பொருளாதாரம், மக்கள் மேம்பாடு அனைத்திலும் நவீன மயம் என்கிற திராவிட மாடல் ஆட்சியில், இந்த நூற்றாண்டின் மகத்தான திட்டமான ‘மகளிர் உரிமைத் தொகை’ குறித்த அறிவிப்பு வெளியாகி, நாடெங்கும். ஏன், உலகெங்கும் இருக்கக்கூடிய பொருளாதார வல்லுநர்கள் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப்பார்த்தால், தாய்வழிச் சமூக முறைதான் மனிதகுலத்தை முதலில் வழிநடத்தி வந்திருக்கிறது என்ற உண்மை தெரியவரும்.
காலப்போக்கில், மதத்தின் பெயராலும், பழமையான மரபுகளின் பெயராலும், பல்வேறு ஆதிக்க வர்க்கத்தாலும் பெண்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டு, கல்வியறிவு மறுக்கப்பட்டது. பெண்குலத்தின் உழைப்பு நிராகரிக்கப்பட்டது. பூட்டிய இரும்புக் கூட்டின் கதவினைத் திறந்து, பெண் அடிமைத்தனத்தைத் தகர்த்து, அவர்களுக்கான சமூக, பொருளாதார சுதந்திரத்தை மீட்க எத்தனையோ சமூக சீர்திருத்தவாதிகள் முன்வந்தாலும், இருபதாம் நூற்றாண்டினுடைய பெரியாரின் சுயமரியாதை இயக்கமே வீறுகொண்ட போராட்டங்களின் மூலமாக பெண் விடுதலைக்குப் பாதை அமைத்தது.
இதுமட்டுமல்லாது, நீதிக்கட்சி ஆட்சி தொடங்கி கடந்த ஒரு நூற்றாண்டு காலம் திராவிட இயக்கம் அயராது பணியாற்றியதன் விளைவு இன்று பள்ளி, கல்லூரிப் படிப்புகளில் மாணவிகள் அதிகம் நுழைந்து, அரசு பணியாளர் தேர்வுகளில் பெண்கள் அதிகம் தேர்ச்சி பெறுவது தமிழ் சமுகத்தின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. அதேபோல், இன்றளவு ஏழை மக்களின் குடும்பங்களிலும், கிராமப்பொருளாதாரத்தை சுமக்கும் முதுகெலும்பாகவும் பெண்கள் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. வேலையிலும், ஊதியத்திலும், சமூகப் இடைவெளியும் வேறுபாடும் ஒருசில இடத்தில் இருந்தாலும், ஆணின் உழைப்புக்கு எந்தவிதத்திலும் பெண்கள் குறைந்தவர்கள் அல்ல என்பது நம் கண் முன்னால் நிருபிக்கப்பட்டு வருகிறது.
மேலும், கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்கத்தான் ‘மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அரசு அங்கீகரித்தால், ஆண்களை உள்ளடக்கிய இந்தச் சமூகமும் பெண்களுக்கான சமஉரிமையை வழங்கிடும் நிலை விரைவில் உருவாகிடும் என்று நமது அரசு உறுதியாக நம்புகிறது. எனவேதான், இந்தத் திட்டத்திற்கு மகளிருக்கான உதவித் தொகை என்று இல்லாமல் ‘மகளிர் உரிமைத்தொகை என்று கவனத்துடன் பெயரிடப்படிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
அதன்படி, கடந்தாண்டு மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளான செப்.15ம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவில் திராவிட மாடல் நாயகனும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் 2022ம் ஆண்டு தரவுகளின் படி இந்தியாவில் பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு விகிதம் 23.97 சதவீதமாகும். தமிழ்நாட்டில் பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு விகிதம் 28.5 ஆக உள்ளது. இது தேசிய சராசரியைவிட அதிகமாகும் 2022-2023ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள பொருளாதார ஆய்வு அறிக்கைபடி தமிழ்நாட்டில் பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு விகிதம் 12 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்த நிலைக்குக் காரணம் திமுக அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பெண் நலன்கள் சார்ந்த திட்டமே இதற்கு பிரதான காரணம் என்றால் அது மிகையாகாது தமிழ்நாட்டில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தின் மூலம் ஏறத்தாழ 1 கோடியே 15 லட்சம் இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ₹1000 வீதம் ஆண்டு ஒன்றுக்கு ₹12 ஆயிரம் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மேலும், இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2023ம் ஆண்டு செப்.15ம் தேதி முதல் 8 மாதங்களில் 1 கோடியே 15 லட்சம் இல்லத்தரசிகளுக்கு மாதம் ₹1,000 வீதம் இதுவரை மொத்தம் ₹9,200 கோடி வழங்கப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தில் இந்திய வரலாறு காணாத மாபெரும் சமுதாய புரட்சித் திட்டம் எனப் பாராட்டுகளை குவித்துள்ளது. பயன்பெற்ற மகளிர் இது எங்கள் அண்ணன் முதல்வர் கொடுத்த தாய்வீட்டுச் சீதனம் என்று பூரிப்புடன் கூறி மகிழ்கிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் சமூகநீதி திட்டங்களில் மாபெரும் முன்னோடி திட்டம்: திமுக அறிக்கை வெளியீடு appeared first on Dinakaran.