சென்னை: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி சென்னை மாவட்டத்தில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான கூடுதல் துணை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குச்சாவடி வாரியாக வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் நுண்பார்வையாளர்களை கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவிற்குத் தேவையான கூடுதல் துணை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி (Additional Supplementary Randomization) மாவட்ட தேர்தல் அலுவலர்/ கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப. தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (17.04.2024) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களை வாக்குச்சாவடி வாரியாக மூன்றாம் கட்டமாக கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணியும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள நுண் பார்வையாளர்களை வாக்குச்சாவடிகளின் வாரியாக இரண்டாம் கட்டமாக கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணியும் தேர்தல் பொது பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில், தேர்தல் பொது பார்வையாளர்கள் டாக்டர் டி. சுரேஷ், இ.ஆ.ப., (சென்னை மத்தியம்) (Dr.D. Suresh, I.A.S.,), கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி, இ.ஆ.ப., (சென்னை வடக்கு) (Mr.Kartikay Dhanji Budhdhabhatti, I.A.S.,), முத்தாடா ரவிச்சந்திரா, இ.ஆ.ப., (சென்னை தெற்கு) (Thiru. Muddada Ravichandra, I.A.S.,) கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., (சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்), ஆர். லலிதா, இ.ஆ.ப., (கூடுதல் ஆணையாளர் (வருவாய் (ம) நிதி), டாக்டர் வி. ஜெய சந்திர பானு ரெட்டி, இ.ஆ.ப., (கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்), டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., (இணை ஆணையாளர் (பணிகள்), ஷரண்யா அறி, இ.ஆ.ப., (துணை ஆணையாளர் (கல்வி), தேர்தல் நடத்தும் அலுவலர்கள்/வட்டார துணை ஆணையாளர்கள் எம்.பி.அமித், இ.ஆ.ப., (தெற்கு), கே.ஜெ.பிரவீன் குமார், இ.ஆ.ப., (மத்தியம்), கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., (வடக்கு), மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்கள்) ச.சுரேஷ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தேர்தல் அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் பேசும்போது தெரிவித்ததாவது; இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வருகின்ற 19.04.2024 அன்று தேர்தல் நடைபெறவுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள 3,726 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவிற்குத் தேவையான 11,843 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4,469 கட்டுப்பாட்டு கருவிகள், 4,842 வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை கருவிகள் (VVPAT) உள்ளிட்ட இயந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. இதில் முன்னிருப்பு இயந்திரங்களும் அடங்கும். பயிற்சிகளுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களை பொறியாளர்கள் முன்னிலையில் ஆய்வுக்கு உட்படுத்தி முன்னிருப்பாக வைத்துக் கொள்ள கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணியும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள நுண் பார்வையாளர்களை வாக்குச்சாவடிகளின் வாரியாக இரண்டாம் கட்டமாக கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணியும் தேர்தல் பொது பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
சென்னை மாவட்டத்தில் உள்ள 3,726 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 299 செக்டார் மெஜிஸ்ரேட் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஜி.பி.எஸ். பொருத்தப்பட்ட வாகனங்களில் காவல்துறை கண்காணிப்பில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான பொருட்களை பிரித்தெடுத்து வழங்குவர். ஒரு செக்டார் மெஜிஸ்ரேட்டுக்கு 8 முதல் 12 வாக்குச்சாவடி மையங்கள் வழங்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள 19,419 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நாளை 16 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ளது. பயிற்சியின் முடிவில் எந்த வாக்குச்சாவடி மையத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆணை வழங்கப்பட்டு, அவர்கள் அந்த வாக்குச்சாவடி மையத்திற்கு செல்வர்.
அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் காலை 5.30 மணி முதல் 7 மணி வரை மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, அதனைத் தொடர்ந்து காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தேர்தலில் பணிபுரியவுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தபால் வாக்குகள் செலுத்த விட்டுபோனவர்களுக்கு இன்று தபால் வாக்குகள் செலுத்த நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான அனைத்து பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் வருகின்ற 19.04.2024 அன்று நடைபெறவுள்ள தேர்தலில் தவறாமல் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதுகுறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கியூ ஆர் குறியீடு (QR code) கொண்ட ஒரு போஸ்டர் வைக்கப்பட்டிருக்கும், அதனை ஸ்கேன் செய்து கேட்கப்படும் தேர்தல் விழிப்புணர்வு கேள்விகளுக்கு பதிலளித்தல், செல்ஃபி மையம் அமைத்தல், குடியிருப்பு நலச் சங்கங்கள் தங்கள் சங்கத்தின் கீழ் வரும் வீடுகள்/ அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் நபர்களின் குறைந்தபட்சம் 90% வாக்குப்பதிவை உறுதி செய்யும் குடியிருப்பு நலச் சங்கங்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு போன்ற பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள 685 பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள், 23 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என 708 வாக்குச்சாவடி மையங்களுக்கு காவல் துறையின் சார்பில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நுண் பார்வையாளர்கள் மூலமும் இந்த வாக்குச்சாவடிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். மேலும், அனைத்து பதற்றமான வாக்குச்சாவடி மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
The post பதற்றமான வாக்குச்சாவடிகளில் நுண்பார்வையாளர்களை கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி தீவிரம்!! appeared first on Dinakaran.