மதுரை: சித்திரை திருவிழா பட்டாபிஷேக நிகழ்வின்போது செங்கோல் வழங்குவதை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் கிளை, நவீன காலத்திலும் பிற்போக்குத்தனமாக வழக்கு தொடர்வதா? கணவரை இழந்தவர் செங்கோல் வாங்கக்கூடாது என ஆகம விதிகளில் எங்குள்ளது என கண்டனம் தெரிவித்துள்ளது. மதுரை கோச்சடையைச் சேர்ந்த தினகரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவின் 8ம் நாளில் நடக்கும் பட்டாபிஷேக நிகழ்வின்போது மீனாட்சி அம்மனிடம் செங்கோல் வழங்கும் வைபவம் நடைபெறும். இச்செங்கோலை அறங்காவலர் குழுத்தலைவர் பெற்றுக்கொள்வார்.
ஆகம விதியின்படி திருமணம் ஆகாதவரோ, கணவன் அல்லது மனைவியை இழந்தவரோ செங்கோலை பெற்றுக்கொள்ள இயலாது. தற்போதைய அறங்காவலர் குழுத்தலைவரான ருக்மணி பழனிவேல்ராஜன், கணவரை இழந்தவர் என்பதால் அவரிடம் செங்கோல் வழங்கக் கூடாது. தகுதியான வேறு நபரிடம் செங்கோலை வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. மனுதாரரின் கோரிக்கையும் ஏற்புடையது அல்ல. அறங்காவலர் குழு தலைவர் என்ற அடிப்படையில் தான் அவரிடம் செங்கோல் வழங்கப்படுகிறது. இதுபோன்ற மனுவை ஏற்கனவே ஐகோர்ட் நீதிபதிகள் அமர்வு விசாரணை செய்து தள்ளுபடி செய்துள்ளது.
எனவே, இந்த மனுவையும் ஏற்கக் கூடாது’’ என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, ‘‘கோயிலில் அனைவரும் சமம் தானே? செங்கோல் வாங்குபவரும் இந்துதானே? கணவரை இழந்தவர்கள் செங்கோல் வாங்கக் கூடாது என ஆகம விதிகளில் எங்கு உள்ளது? விழா ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டுள்ள நேரத்தில் வழக்கை தொடர்ந்திருப்பது ஏன்? இந்த நவீன காலத்திலும் பிற்போக்குத்தனமான கோரிக்கையுடன் வழக்கு தொடர்வதா? இந்தக் காலத்திலும் இதுபோன்ற கருத்துக்களை முன்வைப்பது ஏற்கத்தக்கதல்ல. முன்பே இதுகுறித்து அறநிலையத்துறையிடம் முறையிட்டு இருக்கலாம்’’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
The post நவீன காலத்திலும் பிற்போக்குத்தனமாக வழக்கு தொடர்வதா? கணவரை இழந்தவர் செங்கோல் வாங்க கூடாது என ஆகம விதிகளில் எங்குள்ளது? சித்திரை திருவிழா தொடர்பான மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.