×
Saravana Stores

குமுளூரில் பாரிவேந்தருக்கு உற்சாக வரவேற்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் IJK வேட்பாளர் பாரிவேந்தர், பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் பாரிவேந்தர், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறவாளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில், இன்று லால்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மகிழம்பாடி வடக்கு ஊராட்சியில் பாரிவேந்தர் பரப்புரை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து, புதூர் உத்தமனூர் மற்றும் தச்சன் குறிச்சி கிராமத்திலும், பெருவளநல்லூர் கிராமத்திலும் பாரிவேந்தர் தாமரை சின்னத்திற்கு பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.

பின்னர் குமுளூர் கிராமத்திற்கு வருகை தந்த பாரிவேந்தருக்கு, செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், கும்ப மரியாதை வழங்கியும், ஆரத்தி எடுத்தும் பாரிவேந்தரை பொதுமக்களும், கூட்டணிக் கட்சியினரும் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அப்போது பேசிய அவர், நன்றியுள்ள இந்த ஊருக்கும், பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார். குமுளூர் கிராமத்தில், 5 மாணவர்கள் இலவச உயர் கல்வி திட்டத்தின்கீழ் கல்வி பயின்று வருவதாக பாரிவேந்தர் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, புஞ்சை சங்கேந்தி பகுதியில் பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து, வெங்கடாஜலபுரம் பகுதிக்கு வருகை தந்த பாரிவேந்தருக்கு, விவசாய சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நெற்கதிர்கள், செங்கரும்பு வழங்கியும், பூரண கும்ப மரியாதையுடன் ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். உழவு மாடுகளை ஏர் பூட்டி, பாரிவேந்தர் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் இப்பகுதிக்கு வந்து, பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றித் தருவேன் என உறுதி அளித்தார். இ.வெள்ளனூர் மற்றும் நஞ்சை சங்கேந்தி உள்ளிட்ட பகுதிகளில் பாரிவேந்தர் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதனைத்தொடர்ந்து, பூவாளூர் பகுதியில் ஆதரவு திரட்டிய அவர், நல்லவர்கள் யார்? ஊழல்வாதிகள் யார்? என்பதை அறிந்து வாக்களியுங்கள் என்றும், மறந்தும் சூரியனுக்கு வாக்களிக்காதீர்கள் எனவும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து லால்குடிக்கு வருகை தந்த பாரிவேந்தருக்கு, தேசிய ஜனநாயக கூட்டணியினர் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்தும், ஆரத்தி எடுத்து மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர், மத்திய அரசு வழங்கிய தொகுதி மேம்பாட்டு நிதியான 17 கோடி ரூபாயை, முழுமையாக செலவு செய்து, மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்ததாக தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தாம் செய்த பணிகள், அமைச்சர்களை சந்தித்தது உள்ளிட்டவைகள் குறித்து, புத்தகமாக வழங்கியிருப்பதாக பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

The post குமுளூரில் பாரிவேந்தருக்கு உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Parivendar ,Kumlur ,Perambalur ,IJK ,Perambalur Lok Sabha ,Democratic Party of India ,National Democratic Alliance ,Lok Sabha ,
× RELATED குமுளூர் வேளாண் கல்வி நிலையத்தில் மூங்கில் வளர்க்க தொழில்நுட்ப பயிற்சி