திண்டுக்கல், ஏப். 16: திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சி தலைவர் முகம்மது முபாரக் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் முடியும் நிலையில் வேட்பாளர் முகம்மது முபாரக் தொகுதியில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் வேட்பாளர் முகம்மது முபாரக்கை ஆதரித்து நேற்று பழநி பகுதியில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
பழநி பாத விநாயகர் கோவில், தண்டபாணி நிலையம், பஸ் ஸ்டாண்ட், மூலக்கடை, மதீனா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த பிரசாரத்தில் மாநில இளைஞரணி துணை செயலாளர் ரவி மனோகர், முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால், பழநி கிழக்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன், பேரூர் கழக செயலாளர் சசிகுமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தேமுதிக உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பிரசாரத்தின் போது வாக்காளர்களிடையே பேசிய வேட்பாளர் முகம்மது முபாரக் பேசுகையில், ‘ஆன்மீகத் தலமான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழகம் தாண்டி உலகம் முழுவதிலும் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆனால் பழநியில் அடிப்படை வசதிகள் போதுமான தரத்தில் இல்லாததால் அவர்கள் பெரும் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. ஆகவே பழநி நகரத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வேன். பழநியில் இருந்து சபரிமலைக்கு செல்வதற்கு ரயில் வசதியை ஏற்பாடு செய்து தருவேன்’ என்றார்.
The post பழநியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: திண்டுக்கல் அதிமுக கூட்டணி வேட்பாளர் முபாரக் வாக்குறுதி appeared first on Dinakaran.