×
Saravana Stores

குழந்தை குடித்த பாலில் பல்லி பிரபல ஓட்டலுக்கு நோட்டீஸ்: உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை

வளசரவாக்கம்: பிரபல ஓட்டலில் குழந்தை குடித்த பாலில் பல்லி கிடந்த சம்பவம் தொடர்பாக, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஓட்டல் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர். சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு, அண்ணாநகரை சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வந்து சாப்பிட்டனர். அப்போது, பால் ஆர்டர் செய்து, தங்களது குழந்தைக்கு கொடுத்தபோது, அதில் பல்லி கிடந்ததை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஓட்டல் ஊழியரிடம் கேட்டபோது, அவர் அலட்சியமாக பதில் கூறியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே இதுகுறித்து காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

அப்போது, பல்லி விழுந்த பாலை குழந்தை குடித்துள்ளது. குழந்தைக்கு எதாவது பிரச்னை வந்தால் ஓட்டல் நிர்வாகம்தான் பொறுப்பு என, வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டினர். அதற்கு ஓட்டல் நிர்வாகம் நாங்கள் பொறுப்பல்ல, உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ராம்ராஜ் தலைமையில் அதிகாரிகள் நேற்று காலை அந்த ஓட்டலில் தீவிர ஆய்வு செய்து, பாலில் பல்லி கிடந்தது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, நோட்டீஸ் அளித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post குழந்தை குடித்த பாலில் பல்லி பிரபல ஓட்டலுக்கு நோட்டீஸ்: உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Food safety department ,Valasaravakkam ,Annanagar, Chennai ,
× RELATED புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு...