- தமிழ்நாடு-ஆந்திர எல்லை
- தமிழ்-ஆந்திரப் பிரதேசம்
- பாராளுமன்ற பொதுத் தேர்தல்
- தமிழ்நாடு-ஆந்திர எல்லை
- தின மலர்
திருத்தணி: நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழக – ஆந்திர எல்லை சோதனை சாவடியில் பறக்கும் படையினர் மற்றும் துணை ராணுவ படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அனைத்து தேர்தல் ஏற்பாடுகளையும் மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முழுவீச்சில் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் அலுவலர்கள் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுத்து நிறுத்த வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, தமிழ்நாடு – ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள பொன்பாடி சோதனைச் சாவடியில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் மற்றும் பறக்கும் படையினர் இணைந்து நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் மாநில எல்லையில் வந்து செல்லும் அரசு, தனியார் பேருந்துகள், லாரிகள், வேன், கார், கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன. இதேபோல் மாநில, மாவட்ட சாலைகளில் கிராமப் பகுதிகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்தி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுத்து நிறுத்த தேர்தல் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
* 3 நாட்கள் மதுக்கடையை திறக்கக்கூடாது- கலெக்டர் எச்சரிக்கை
திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான த.பிரபு சங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகள் 1981 மற்றும் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் விதிகள் 2003ன் படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், கிளப்புகள், ஓட்டல்களில் அமைந்துள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வாக்குப் பதிவினை முன்னிட்டு 17ம் தேதி (நாளை) காலை 10 மணி முதல் 19ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை கண்டிப்பாக மூடப்படவேண்டும். மேலும் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் மாதம் 4ம் தேதியன்றும் கண்டிப்பாக மூடப்படவேண்டும். மேலும் உத்தரவை மீறி மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், கிளப்புகள், ஓட்டல்களில் அமைந்துள்ள மதுக்கூடங்கள் திறப்போர், உரிமையாளர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார்.
The post வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள நிலையில் தமிழக – ஆந்திர எல்லையில் தீவிர வாகன சோதனை: பறக்கும் படையினர் நடவடிக்கை appeared first on Dinakaran.