×
Saravana Stores

திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவர் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கோலாகல தொடக்கம்: 10 நாட்களுக்கு வெகு விமரிசையாக நடக்கிறது

திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது. இந்த விழா 24ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நேற்று அதிகாலை 4.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து காலை தங்க சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும், உற்சவர் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் 2ம் நாளான இன்று காலை ஹம்ஸ வாகனத்தில் வீதி உலாவும், திருமஞ்சனம் நிகழ்ச்சியும், இரவு சூர்ய பிரபை பக்தி உலாவும் நடைபெறும். பிரம்மோற்சவ விழாவின் 3ம் நாளான நாளை (17ம் தேதி) காலை கருட சேவை கோபுர தரிசனம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இரவு ஹனுமந்த வாகனத்தில் வீதி உலாவும், 4ம் நாளான 18ம் தேதி காலை சேஷ வாகனத்திலும், இரவு சந்திர ப்ரபை வாகனத்திலும் வீதி உலா நடைபெற உள்ளது. 5ம் நாளான 19ம் தேதி காலை நாச்சியார் திருக்கோலத்திலும், இரவு யாளி வாகனத்திலும் வீதி உலா நடைபெற உள்ளது.

6ம் நாளான 20ம் தேதி காலை வேணுகோபாலன் திருக்கோலமும், சூர்ணாபிஷேகமும், வெள்ளி சப்பரத்தில் வீதி உலாவும், இரவு யானை வாகனத்தில் வீதி உலாவும், 7ம் நாளான 21ந் தேதி காலை 7.30 மணிக்கு தேர் திருவிழாவும், இரவு திருத்தேரிலிருந்து பெருமாள் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 8ம் நாளான 22ம் தேதி காலை திருமஞ்ஜனமும், இரவு குதிரை வாகனத்தில் வீதி உலாவும் வந்து உற்சவர் அருள்பாலிப்பார். 9ம் நாளான 23ந் தேதி காலை ஆள்மேல் பல்லக்கு நிகழ்ச்சியும், திருக்குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. இரவு விஜயகோடி விமானத்திலும் உலா வருவார். 10ம் நாளான 24ம் தேதி காலை திருமஞ்ஜனமும், இரவு கண்ணாடி பல்லக்கும் என உற்சவர் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

The post திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவர் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கோலாகல தொடக்கம்: 10 நாட்களுக்கு வெகு விமரிசையாக நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Chitrai month Brahmotsava festival ,Thiruvallur Sri Vaidya ,Veeraragavar ,Temple ,Tiruvallur ,Chitrai Brahmotsavam ,Sri Vaidya Veeraragava Perumal Temple ,Chitrai ,Tiruvallur Sri Vaidya ,
× RELATED வீரராகவர் கோயிலில் அமாவாசையன்று...